அஜ்மானின் கார்னிச் பகுதியில் நேற்று டிரைவர் இல்லா பேருந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே டிரைவர் இல்லா பேருந்து சேவையை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய நாடு என்னும் பெருமையை இதன்மூலம் அமீரகம் பெற்றிருக்கிறது.
சாலையின் சிக்னல்கள், பாதசாரிகள் கடப்பதற்கு ஏற்றவாறு பாதுகப்பா பயணம் மேற்கொள்ள இந்தப் பேருந்தில் 14 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த சென்சார்களுக்கு தேவையான தரவுகளை சாலையில் இதற்கென பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக சென்சார்கள் அளிக்கும்.
எதிரே வாகனங்கள் வரும் பட்சத்தில் அதனை துல்லியமாகக் கணித்து 20 மீட்டர் தொலைவிலேயே பேருந்து தாமாகவே நிற்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்னிச் சாலையில் 3 கிலோமீட்டருக்கு இந்த தானியங்கி பேருந்து இயக்கப்படும் எனவும் விரைவில் வழித்தடம் 7 கிலோமீட்டர்களாக நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு நிறுவனத்தின் உதவியுடன் அமீரகத்தின் ION நிறுவனத்தினைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த தானியங்கி பேருந்தை வடிவமைத்திருக்கிறார்கள். அஜ்மான் நகராட்சி மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குனர் ஷேக் ரஷீத் பின் ஹுமைத் அல் நுவைமி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மாநில அமைச்சர் உமர் அல் ஒலாமா ஆகியோர் நேற்று இப்பேருந்தில் முதல் பயணத்தில் கலந்துகொண்டனர்.
