அமீரக யூனியனின் பொன்விழா பல்வேறு வகைகளில் அமீரக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறந்த எதிர்காலத்தினை தீர்மானிக்கும் பொருட்டு 50 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது அமீரக அரசு.
இந்தத் திட்டங்களில் ஒன்றுதான் இந்த விசா செல்லுபடிக்காலம் நீட்டிப்புத்திட்டம். அதாவது அமீரகத்தில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டைச் சேர்ந்த நபர்கள் தங்களது வேலையை இழந்தாலோ அல்லது விசாவை கேன்சல் செய்தாலோ அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் அமீரகத்தினை விட்டு வெளியேற வேண்டும். இந்நடைமுறையே தற்போது பின்பற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இந்த 1 மாத கருணைக் காலத்தினை 6 மாதங்களாக நீட்டிக்க இருப்பதாக வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர்.தானி பின் அகமது அல் ஜியுடி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலமாக வேலையை இழந்தவர்கள் மீண்டும் புதிய வேலையை தேடிச் சேர்வதற்கு கூடுதல் நேரம் அளிக்கப்படும். இது அவர்களது பொருளாதார நிலைமையை உயர்த்த பயன்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
