மார்ச் 1-க்கு முன் விசா காலாவதியான நிலையில், விசா விதிகளை மீறும் வகையில் சட்ட விரோதமாக அமீரகத்தில் வசிப்போருக்கான கருணை காலம் சமீபத்தில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் விசா விதிகளை மீறியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கருணை காலத்தை கொண்டு பயனடைவதற்கான நடைமுறைகள் குறித்து, அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம்(ICA) விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக ICA தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ மார்ச் 1-ம் தேதிக்கு முன் விசா காலாவதியாகி, வசிப்பிட சட்டங்களை மீறி நாட்டில் வசிப்போர் அனைத்து அபராதங்கள் மற்றும் பிற நிர்வாகக் கட்டுப்பாடுகளிலிருந்து கருணை காலத்தை பயன்படுத்தி விலக்கு பெறலாம்’ என்று கூறியுள்ளது.
Procedures of benefitting from the grace period granted to the visa violators by their exemption from all imposed fines and other administrative restrictions.#IdentityandCitizenship #ICAUAEeChannels pic.twitter.com/Mw3L9phM9M
— Identity and Citizenship- UAE (@ICAUAE) December 3, 2020
விசா விதிமீறலில் ஈடுபட்டுள்ளோர் வரும் டிசம்பர் 31-க்கு முன் புறப்படும் தேதி இருக்குமாறு பார்த்து கொண்டு, தங்களது விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட்டுடன் விமான நிலையத்திற்கு வர வேண்டும்.
இதில் மார்ச் 1-ஆம் தேதிக்கு முன் காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையங்களில் இருந்து அவர்கள் பயணிக்க திட்டமிட்டிருந்தால், கருணை கால திட்டத்தில் பயனடைவதற்காக தங்களது பயண நேரத்திற்கு முன்னால், குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு சென்று விட வேண்டும்’ என்றும் ICA குறிப்பிட்டுள்ளது.
மேலும் தகவல் தெரிவித்துள்ள ICA, அதுவே துபாய் மற்றும் அல் மக்தூம் விமான நிலையங்கள் வழியாக பயணிக்க உள்ள விசா விதி மீறலில் ஈடுபட்டோர், தங்களது பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன், துபாய் சிவில் ஏவியன் செக்யூரிட்டி சென்டருக்கு சென்று விட வேண்டும். விசா விதிமீறலில் ஈடுபட்டுள்ளவர்களின் ஸ்பான்சர்ஷிப்பில் தங்கியிருப்பவர்களும், கருணை காலத்தை பயன்படுத்தி அவர்களுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ICA அறிவுறுத்தியுள்ளது.