UAE Tamil Web

விசிட் விசாவில் அமீரகம் வந்தவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற முடியுமா? – நடைமுறை என்ன?

vaccination

இந்தியாவைச் சேர்ந்த மன்மோகன்சிங் – சதிந்தர் கவுர் தம்பதி விசிட் விசா மூலமாக கடந்த ஜனவரி மாதம் துபாய் வந்திருக்கின்றனர். 70 வயதைக் கடந்த இந்தத் தம்பதிக்கு சில நெடுநாள் உடல் உபாதைகள் இருக்கின்றன. தற்போதைய இந்தியாவின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தங்களது விசாவை மேலும் 3 மாத காலத்திற்கு இவர்கள் நீட்டித்துள்ளனர். இப்போது பிரச்சினை இதல்ல.

இவர்களுக்கு வந்த வாட்சாப் புரளி ஒன்று தான் பிரச்சினை. அந்த மெசேஜில்,

“ராஸ் அல் கைமாவில் உள்ள அரசு தடுப்பூசி மையத்தில் விசிட் விசாவில் வந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. பாஸ்போர்ட் மற்றும் விசா பக்கத்தின் நகல் ஆகியவற்றை எடுத்துச்சென்று போட்டுக்கொள்ளலாம். இந்த முக்கியமான தகவலை உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகத்தின் இணையதள முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாட்சாப் வாயன்களின் பேச்சைக்கேட்டு, தனது மனைவியை அழைத்துக்கொண்டு ராஸ் அல் கைமா சென்றிருக்கிறார் மன்மோகன்சிங். ஆனால் அங்கே அப்படியொரு நடைமுறை இல்லை எனவும், அமீரக குடிமக்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய மன்மோகன்சிங்,”துபாயில் இருக்கும் எங்களது உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ரெசிடென்சி விசாவில் வசித்துவருகிறார்கள். அதனால் அவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். எங்களுக்கு இணை நோய்கள் இருப்பதால் நாங்கள் எளிதில் நோய்த்தாக்குதலுக்கு உட்படும் அபாயம் இருக்கிறது. அமீரக அரசு விசிட் விசாவில் வந்தவர்களுக்கும் இந்த சேவையை வழங்கிடவேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

vaccination
0 Shares
Share via
Copy link