UAE Tamil Web

“கண் தெரியாவிட்டால் என்ன..? நான் சாதிக்கப் பிறந்தவள்” – 98.9% மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறன்கொண்ட மாணவி – கல்விச் செலவுகளை ஏற்பதாக அமீரக அரசு அறிவிப்பு..!

al junaid

சாதித்துக் காட்டுவதற்கு உள வலிமையும் கடின உழைப்பும் இருந்தால் மட்டும் போதும் என்பதற்கு மீண்டுமொரு உதாரணமாக இந்த உலகிற்கு தன்னை அறிவித்திருக்கிறார் அல் ஜுனைத் என்னும் மாணவி.

சூடானை தாயகமாகக் கொண்டாலும் அவர் தற்போது அஜ்மானில் வளர்ந்துவருகிறார். அஜ்மானில் உள்ள அல் ஹிக்மா தனியார் பள்ளியில் கல்வி பயின்ற அல் ஜுனைத் பள்ளி இறுதித் தேர்வில் 98.9% மதிப்பெண் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் படிக்கும் முறையான பிரெய்லி வழியாகவே தனது பாடங்களை ஜுனைத் பயின்றிருக்கிறார். ஆன்லைன் வழியாக பாடங்களை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவடைந்திருக்கிறார். அதன்காரணமாகவே அவரால் இத்துணை பெரிய மதிப்பெண்களை எடுக்க முடிந்திருக்கிறது.

இதனையறிந்த அஜ்மானின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி அவர்கள் அஜ்மான் பல்கலைகழகத்தில் ஜுனைத்திற்கு முழு கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஜுனைத்,” எனக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்த அரசுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். அமீரகத்தில் என்னைப்போல மாற்றுத்திறனோடு போராடிவரும் அனைவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். என்னுடைய குறைபாடைப் புரிந்துகொண்டு எனக்கேற்றார்போல் படிப்பு சாதனங்களை வழங்கி என்னுடைய நம்பிக்கைக்கு வலு சேர்த்த பள்ளிக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய லட்சிய ஜோதியின் தழலில் கண் தெரியாததால் ஏற்படும் கஷ்டங்களை நான் எரிக்கிறேன். கண் தெரியாவிட்டால் என்ன? நான் சாதிக்கப் பிறந்தவள். என்னைப்போன்றவர்களுக்கும் உதவ அமீரக அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எப்போதும் நன்றி பகர கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அரபி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்று, அதிலேயே முனைவர் பட்டம் பெறுவதுதான் தன்னுடைய லட்சியம் என்கிறார் ஜுனைத். ஆயிரம் இடர்கள் எதிர்வரினும் தெளிவான குறிக்கோளை நெஞ்சில் சுமந்து உறுதியுடன் பயணிக்கும் ஜுனைத்தின் கால்கள் அடையவேண்டிய உயரம் இன்னும் பல இருக்கிறது.

al junaid
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap