அமீரகத்தில் இன்றுகாலை ஷேக் முகமது பின் சயீத் சாலை, உம் அல் குவைனில் உள்ள கார்னிச் மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதன்காரணமாக வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்துள்ளது. புஜைரா மற்றும் அபுதாபியில் மழைமேகங்கள் உருவாவதால் மழை பொழிய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
அதிகபட்ச வெப்பநிலை 41 – 47 °C ஆக இருக்கும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 -30 °C ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி காற்று வீசுவதால் புழுதிப்படலம் உருவாகலாம் எனவும் இதனால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோமீட்டர் வரையில் காற்றானது வீசக்கூடும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசான சீற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
