அமீரகம் முழுவதும் இன்று கன மழை பெய்யும் என்று தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அபுதாபி, அல் அய்ன், ராஸ் அல் கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. இதே போல், வடக்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளிலும், துபாயின் ஜெபல் அலி பகுதியிலும் நேற்று மழை பெய்தது. அமீரகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததையடுத்து, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அல் கஸ்னா மற்றும் அல் ஃபூவா, அல் ஐன் ஆகிய இடங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அபுதாபி – அல் ஐன் சாலையில் மிதமான மழை பெய்யும் என்றும், மலைப்பகுதியில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம்(NCM) தெரிவித்துள்ளது. குறிப்பாக குறிப்பாக சில வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும், கடலையொட்டிய பகுதிகளிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் போது சாலைகள் வழுக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 22 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறைந்தபட்சமாக 9 முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அமீரகத்தின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.15 மணிக்கு ஜெபல் ஜெய்ஸில் (ராஸ் அல் கைமா) 7.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மணிக்கு 40 கி.மீ வரை காற்று வீசும் என்பதால் தூசி மற்றும் மணலால் வாகன ஓட்டிகள் அவதிப்படக்கூடும். அதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கும் படி, துபாய் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளனர்.
அரேபிய வளைகுடாவில் கடல் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமானது முதல் கொந்தளிப்பாகவும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
