UAE Tamil Web

அமீரகம்: 11 நாட்கள் விடுமுறை – ஈத் அல் பித்ர், ஈத் அல் அத்ஹா எப்போது துவங்குகின்றன?

EID AL FITR

அமீரகத்தில் மே 13 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஈத் அல் பித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும் என வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு யூனியனின் உறுப்பினர் இப்ராஹீம் அல் ஜார்வான் தெரிவித்துள்ளார்.

மே 12 ஆம் தேதி மாலை ஷவ்வால் பிறை தென்படும் ஆகவே அடுத்தநாள் அதாவது மே13 ஆம் தேதி ஈத் அல் பித்ர் -ன் முதல் நாள் என ஜர்வான் தெரிவித்துள்ளார். அமீரக பிறை பார்க்கும் கமிட்டி உறுப்பினர்கள் மே 11 ஆம் தேதி கூடி, அன்றைய தின சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவர்.

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதத்தின் இறுதி நாள் ஈத் அல் பித்ர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி போலல்லாமல், பிறை தென்படுவதை வைத்தே மாதங்களின் துவக்கமும் முடிவும் இஸ்லாத்தில் கணக்கிடப்படுகிறது.

அமீரக அரசின் விடுமுறை நாட்களின் பட்டியலில் ரமலானின் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதமான ஷாவ்வால் 3 ஆம் தேதிவரையில் ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே, மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 15 ஆம் தேதிவரை (சனிக்கிழமை) வரை அமீரகத்தில் விடுமுறை விடப்பட இருக்கிறது.

ஈத் அல் அத்ஹா

தியாகத் திருநாளான ஈத் அல் அத்ஹா ஜூலை 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் என ஜார்வான் தெரிவித்துள்ளார்.

ஜூலை 11, (ஞாயிற்றுக்கிழமை) துல் ஹிஜ்ஜாவின் முதல் நாளாகவும், ஜூலை 19 (திங்கள்) அராபத்தின் முதல் நாளாகவும் குறிக்கப்படும். ஜூலை 20 (செவ்வாய்க்கிழமை) ஈத் அல் அத்ஹாவின் முதல் நாளாக இருக்கும் என ஜார்வான் குறிப்பிட்டுள்ளார்.

அராபத் தினத்திற்கு ஒருநாள், ஈத் அல் அத்ஹாவிற்கு 3 நாட்கள் என அமீரக அதிகாரிகள் விடுமுறை அளித்திருந்தனர். இருப்பினும் ஜூலை 19 – ஜூலை 24 ஆம் தேதிவரையிலான 6 நாட்கள் (வார இறுதி விடுமுறைகளையும் சேர்த்து) அமீரகத்தில் விடுமுறை விடப்பட இருக்கிறது.

ஆகவே, ஈத் அல் பித்ர் மற்றும் ஈத் அல் அத்ஹா பண்டிகைகளுக்கு மொத்தம் 11 நாட்கள் விடுமுறை விடப்பட இருக்கிறது.