UAE Tamil Web

காரை பார்க் செய்கையில் நிகழ்ந்த சிறிய தவறு: கணவன் கண்முன்னே உயிரிழந்த இந்தியப் பெண்..!

parking

அமீரகத்தில் வசித்துவரும் இந்தியத் தம்பதி ஒன்று கடந்தவாரம் தங்களது காரில் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறது. அப்போது காரைப் பார்க் செய்கையில் கணவர் செய்த சிறிய தவறின் காரணமாக 45 வயதுடைய அவருடைய மனைவி படுகாயமடைந்திருக்கிறார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அப்பெண்மணி அழைத்துச்செல்லப்பட்டாலும் அவருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார்.

பார்க்கிங்

காரை பார்க் செய்ய முயற்சிக்கையில் காருக்கு முன்னே நின்று தனது கணவருக்கு ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார் மரணமடைந்த பெண்மணி. இவர்களது கார் ஒருபுறம் மற்றொரு காருக்கும் அடுத்த பக்கம் மருத்துவமனையின் சுவருக்கும் நடுவே நின்றிருக்கிறது.

இதனால் காருடன் போராடிக்கொண்டிருந்த கணவர் தவறுதலாக வாகனத்தை முன்னோக்கி நகர்த்தியிருக்கிறார். அப்போது எதிரே நின்ற அவரது மனைவி காரால் மோதப்பட்டு காயமடைந்திருக்கிறார்.

விபத்துக் குறித்து தகவலறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்துவந்து காயமடைந்த பெண்ணினை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இருப்பினும் காயம் காரணமாக பெண்மணி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனத்தை இயக்கும்போதும் பார்க் செய்யும்போதும் அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் பாதசாரிகளை கவனிக்கவேண்டும் என காவல்துறை வாகனவோட்டிகளை எச்சரித்திருக்கிறது.

parking
0 Shares
Share via
Copy link