நண்பர்களுக்கு மத்தியில் சண்டை வருவதெல்லாம் சகஜம். ஆனால் அல் அய்னில் தனது தோழிக்கு பெண் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண் தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற பெண், சுடு தண்ணீரை எடுத்து சக தோழியின் முகத்தில் ஊற்றியுள்ளார். வலியால் துடிதுடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு தனக்கு நேர்ந்த கொடுமைக்காக அல் அய்ன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
வழக்கில் சுடு தண்ணீர் தனது முகம், நெஞ்சு, கைகள் உள்ளிட்டவற்றில் ஊற்றப்பட்டதால் கடும் வேதனையடைந்துள்ளதாகவும் தீக்காயங்கள் வடுவாக மாறுவதால் வேலை, குடும்பத்தை அதிகளவு பாதித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ள்ளார். மேலும் தனக்கு இழப்பீடாக தனது தோழியிடம் இருந்து 1,00,000 திர்ஹம் பணத்தை வாங்கித் தர வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த சம்பவத்தை முற்றிலும் மறுத்த எதிர்தரப்பு சுடு தண்ணீர் தவறுதலாக உடம்பில் பட்டதாகவும் அது ஒரு விபத்து எனவும் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்த அல் அய்ன் நீதிமன்றம், தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட சக தோழிக்கு 45,000 திர்ஹஸ்சை இழப்பீட்டு தொகையாக வழங்க சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு உத்தரவிட்டுள்ளது. வைகை புயல் வடிவேலு பாணியில் பேச்சு பேச்சாகவே இருந்திருந்தால் இவ்வளவு பெரிய சிக்கலில் தோழிகள் இருவருமே சிக்கியிரிக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்
