UAE Tamil Web

டி 10 கிரிக்கெட்: ஆஸி., வீரர் கிறிஸ் லினின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த அமீரக இளம் நட்சத்திரம்..

ali shan

அமீரகத்தில் நடைபெற்ற டி 10 லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில், அமீரகத்தை சேர்ந்த இளம் வீரர் ஒருவர்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லினின் சாதனையை முறியடித்துள்ளார்.

- Advertisment -

அமீரகத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான 17 வயதான அலி ஷான் ஷராஃபு, டி 10 கிரிக்கெட்டில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். ஷராஃபு அமீரகத்தின் அண்டர் 19 அணி மற்றும் மூத்த தேசிய அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார்.

ஈடன் கார்டன் அஜ்மானில் நடந்த அஜ்மான் டி 10 டேலண்ட் ஹன்ட் லீக்கில் வெறும் 42 பந்துகளில் 146 ரன்களை குவித்துள்ளார் ஷராஃபு. இதில்14 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். பசிபிக் கோல்ட்டே(Pacific Goltay) அணிக்காக, ஸ்பார்டன்(Spartan) அணியை எதிர்த்து விளையாடிய போது ஷராஃபு இந்த சாதனையை நிகழ்த்தினார்.

கடந்த சீசனில் அபுதாபி டி 10 லீக்கில் டீம் அபுதாபிக்கு எதிராக மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின்(Chris Lynn) வெறும் 30 பந்துகளில் 91 ரன்கள் குவித்திருந்தார். ஆனால் ஷராஃபு டி 10 -ல் அதிரடியாக விளையாடி சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

தன் சாதனை பற்றி உற்சாகமுடன் பேசிய ஷராஃபு, உண்மையில் டி 10-ல் யாராவது சதமடிக்க முடியும் என்று என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. கிறிஸ் லின் 91 ரன்களை குவித்திருந்ததே டி 10-ல் ஒரு பேட்ஸ்மேன் பெறக்கூடிய அதிகபட்சமாக இருக்கும் என்று தான் நினைத்திருந்தேன் என்றார். டி 10 லீக்கை மற்ற போட்டிகளை போல தான் நான் எதிர்கொள்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பேட்ஸ்மேன் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும்.

ஆரம்பத்தில் இது ஒரு சவாலாக தான் இருந்தது. நான் எப்போதுமே ஒரு ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக இருக்கவே விரும்புகிறேன். மற்ற ஃபார்மெட் போட்டிகளை விட டி 10-யில் எதிர்வினையாற்ற குறைந்த நேரமே இருக்கும் என்று கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க வேண்டும் வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார்.