UAE Tamil Web

அமீரக தேசிய தினம் 2020: பூமி கண்காணிப்பு துறையில் சாதனை படைத்த அமீரகம்.! வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமீரக செயற்கைக்கோள்..(வீடியோ)

falcon

அமீரகத்தின் 49-வது தேசிய தினமான இன்று பூமி கண்காணிப்பு துறையில் அமீரகம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் கோவிட் -19 தொற்று காரணமாக பல மாதங்களாக தாமதமாகி வந்த அமீரகத்தின் செயற்கைக்கோள் ஒன்றை ஏவும் நிகழ்வு, இன்று அரங்கேறியுள்ளது.

- Advertisment -

தேசிய தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் டிசம்பர் 2 ஆம் தேதியான இன்று அமீரக நேரப்படி அதிகாலை 5.33 மணியளவில், பிரெஞ்சு கயானா விண்வெளி மையத்தின் கொரூ பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஏரியன்ஸ்பேஸ் சோயுஸ் ராக்கெட் மூலம், அமீரகத்தின் சமீபத்திய ஃபால்கான் ஐ 2(Falcon Eye 2) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

1,190 கிலோகிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், காலை 6.33 மணிக்கு ராக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டு பூமியிலிருந்து 611 கிலோமீட்டர் தொலைவில் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாக செயல்பட உள்ள ஃபால்கான் ஐ 2, முக்கியமான பணிகள், அவசர நிவாரணம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான படங்களை வழங்கும். தவிர சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் புவியியல் அம்சங்களுக்கான மாற்றங்களையும் இது கண்காணிக்கும்.

இந்த செயற்கைக்கோள் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட ஆப்டிகல் கண்காணிப்பு திறன்களை வழங்குகிறது, அதோடு அதிக செயல்திறன் கொண்ட தரை பிரிவுடன் படங்களை பெறவும், செயலாக்கவும் முடியும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

முன்னதாக அமீரக ஆயுதப்படைகளுக்காக இரண்டு ஒத்த செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன. இதில் கடந்த ஆண்டு இத்தாலியன் வேகா ராக்கெட்டில் செலுத்தப்பட்ட ஃபால்கான் ஐ 1 செயற்கைகோள் ஏவும் திட்டம் தோல்வியடைந்தது. இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் ஃபால்கான் ஐ 2 செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. பல இடையூறுகளுக்கு பின் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஏவுவது என்று முடிவானது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த இரு நாட்களும் ரத்து செய்யப்பட்டு, தேசிய தினமான இன்று அமீரகத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.