UAE Tamil Web

50-வது தேசிய தின ஆண்டை செவ்வாய் சாதனையுடன் கொண்டாட தயாராகும் அமீரகம்..!

hope probe uae

துபாய் : வரும் ஜூலை 15 ஆம் தேதி, ஜப்பானின் தனேகஷிமா ஸ்பேஸ் சென்டரிலிருந்து (Tanegashima Space Centre) அமீரகத்தின் ஹோப் என்னும் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட இருக்கிறது. விண்கலத்தை செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளை பார்வையிட்ட அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் “இந்த விண்கல திட்டம் அமீரகத்தின் வரலாற்றில் மிக முக்கிய தருணமாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

“அமீரகத்தின் கடந்த மற்றும் அடுத்த 50 ஆண்டுகளுக்கான இணைப்புப் புள்ளியாக இத்திட்டம் திகழ இருப்பதாக” ஷேக் முகமது குறிப்பிட்டார்.

“கடந்த 50 ஆண்டுகால நம் மக்களின் வளர்ச்சியின் அடையாளம் தான் இந்த விண்கலத் திட்டம். நமது மக்களின் சாதனைகளைக் குறித்து பெருமைப்படவும், உலகத்துடன் இணைந்து அவர்கள் பெற்றிருக்கும் வெற்றியை நாம் கொண்டாடவும் வேண்டும். நமக்கான வெகுமதி இது. நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” – ஷேக் முகமது.

பூமியிலிருந்து 495,000,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு தனது பயணத்தை ஹோப் விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி, அமீரக நேரப்படி 00:51:27 மணிக்குத் துவங்குகிறது. (ஜப்பானிய நேரப்படி 05:51:27 மணிக்கு)

ஹோப் விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் புகைப்படத்தை செவ்வாய்க்கிழமை டிவிட்டரில் வெளியிட்டது துபாய் ஊடக அலுவலகம். பொறியாளர்கள் அந்த ராக்கெட்டின் பயணத்திற்கான இறுதிக்கட்ட வேலையில் ஈடுபட்டிருப்பதை புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது.

அமீரக யூனியன் உருவாக்கப்பட்டதன் 50 வது ஆண்டான 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடையும்.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகம் ஒன்றிற்கு விண்கலத்தினை முதன் முதலில் செலுத்த இருக்கும் அமீரகத்தின் இந்த ஹோப் திட்டத்திற்கான கவுண்ட்டவுன் துவங்குவதை எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன் குழுவினருடன் (Emirates Mars Mission) துபாய் ஆட்சியாளர் பார்வையிடும்போது, துபாயின் பட்டத்து இளவரசரும், முகமது பின் ரஷீத் ஸ்பேஸ் சென்டரின் (Mohammed bin Rashid Space Centre ) தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) உடனிருந்தார்.