UAE Tamil Web

நள்ளிரவில் சீறிப்பாயும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த அதிரடியில் இறங்கிய போலீசார்.! வாகன சாகசங்கள் செய்வோருக்கும் எச்சரிக்கை

RAK

சட்டவிரோத பந்தயங்கள் அல்லது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கைது மற்றும் அபராதம், வாகன பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று பொறுப்பற்ற வாகன ஓட்டுனர்களை அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

- Advertisment -

ட்ரிஃப்ட்டிங், கார் மற்றும் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டு அதை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிடுவதற்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற ஓட்டுனர்களால் ஏற்படும் தேவையற்ற விபத்துக்களை தடுக்கும் முயற்சியில் ராஸ் அல் கைமா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து பிரச்சாரம் ஒன்றையும் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் போக்குவரத்து விதிகளை மீறும் பொறுப்பற்ற ஓட்டுநர்களை பிடிக்கும் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆய்வு துவக்கப்பட்ட முதல் நாளிலேயே, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொறுப்பற்ற முறையில் ஓட்டப்பட்ட ஆறு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராஸ் அல் கைமாவின் பல பகுதிகளிலும் இது போன்ற வாகன பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற போக்குவரத்து பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வை பரப்புவதற்கும், ஓட்டுநர்களுக்கு நேர்மறையான நடத்தையை ஊக்குவிக்கவும் நோக்கமாக கொண்டு காவல்துறையினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

car

ராஸ் அல் கைமா காவல்துறையின் மத்திய நடவடிக்கைகளின் இயக்குநர் பிரிகேடியர் டாக்டர் முகமது சயீத் அல் ஹுமைதி இது தொடர்பாக பேசும் போது, ‘ பெரிய விபத்துக்களை ஏற்படுத்தும்போக்குவரத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும், மற்ற வாகன ஓட்டிகளை கருத்தில் கொள்ளாமல் தங்கள் வாகனங்களை பொறுப்பற்ற முறையில் அதிக வேகத்தில் இயக்குவோருக்கு எதிராகவும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

நள்ளிரவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கட்டுப்படுத்த ராஸ் அல் கைமாவின் உள் மற்றும் வெளி சாலைகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் ஆய்வு மற்றும் பறிமுதல் பணிகளை மேற்கொள்வதற்காக பல களக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட்டு சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். சாலை சாகசங்களில் ஈடுபட்டு அவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல் பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது, பொது அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு 2,000 திர்ஹம்ஸ் மற்றும் 23 போக்குவரத்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும். மேலும் 60 நாட்களுக்கு வாகனம் சிறைபிடித்து வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.