ஷார்ஜாவில் வசித்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஓர்மான் அலி (20) ஐக்கிய ராஜ்யத்தில் கல்லூரி பயின்றுவருகிறார். கொரோனா காரணமாக தற்போது அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் தற்போது ஷார்ஜாவில் தனது குடும்பத்தாருடன் வசித்துவருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உம் அல் குவைன் கடற்கரைக்கு தனது குடும்பத்தாருடன் சென்ற ஓர்மான் அலி கடலில் குளிக்கச் சென்றிருக்கிறார். அன்றைய தினம் அவருடைய பிறந்தநாள். கடலில் தனது நண்பர்களுடன் அலி குளிக்கும்போது அலை அவரை இழுத்துச்செல்வதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
கடற்புற மீட்புக்குழு, டிரோன், ஹெலிகாப்டர் ஆகியவை உஷார்படுத்தப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தது. இதுகுறித்துப் பேசிய காவல்துறை, மீட்புப்படை அங்கே சென்ற வேளையில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் கடலில் நீந்திக்கொண்டிருந்தனர். அதில் இருவர் மூழ்கும் நிலையில் இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு உம் அல் குவைன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மற்றொருவரை மீட்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தது.

இருப்பினும் உம் அல் குவைன் காவல்துறை, தேசிய தேடுதல் மற்றும் மீட்பு மையம், துபாய் காவல்துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள், எல்லை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உம் அல் குவைன் சிவில் பாதுகாப்புத்துறை ஆகியவற்றுடன் இணைந்து ஓர்மான் அலியின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டது.
நம்பிக்கையுடன் காத்திருந்த தந்தை
ஞாயிற்றுக்கிழமை தனது மகன் கடலில் மூழ்கினாலும் அடுத்த மூன்று நாட்களும் ஓர்மானின் தந்தை கடற்கரைக்கு நம்பிக்கையுடன் வந்து காத்திருந்தார். மீண்டும் தன் மகன் தன்னிடம் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அவரது 5 குழந்தைகளில் அலி கடைசி பையன் எனச் சொன்ன தந்தைக்கு இறுதியில் பேரதிர்ச்சியே எஞ்சியது.
புதன்கிழமை காலை 11.15 மணிக்கு நகா பகுதியில் அலியின் உடல் கிடைத்தது. அலியின் உறவினர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அது அலியின் உடல்தான் என குடும்பத்தினர் உறுதிகூறிய பிறகு உடல் பிணக்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அலியின் இழப்பிற்காக அவரது குடும்பத்திடம் இரங்கல் தெரிவித்த காவல்துறை, கடலில் நீந்தச் செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நீந்த வேண்டும் எனவும், பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய உம் அல் குவைன் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் ரஷீத் பின் அஹமது முவல்லா,” ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கிய இளைஞரின் உடல் மூன்று நாட்கள் கழித்து தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக புதன்கிழமையன்று கிடைத்தது. இளைஞரின் குடும்பத்திற்கு காவல்துறை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பணியில் ஈடுபட்ட தேசிய தேடுதல் மற்றும் மீட்பு மையம், துபாய் காவல்துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள், எல்லை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உம் அல் குவைன் சிவில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த நபர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.