இன்று மே 20 வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, மறைந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் என்று அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு பொதுச் சபை மண்டபத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வின்போது, அமீரகத்தின் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஐநா பொதுச் சபை உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர பிரதிநிதிகள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவார்கள்.
இன்றைய தினம், மரியாதைக்குரிய அடையாளமாக நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் ஐநா கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பு நாடுகள், ஐநா பொதுச் சபையில் உள்ள ஐந்து பிராந்திய குழுக்களின் தலைவர்கள் மற்றும் அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி, புரவலன் நாடு, அமீரக அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இரங்கல் மற்றும் அனுதாபங்களை வெளிப்படுத்தவும், ஷேக் கலீஃபாவின் பாரம்பரியம் மற்றும் சாதனைகளைப் பிரதிபலிக்கவும் நினைவூட்டலின் போது அறிக்கைகளை வழங்குவார்கள்.
செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஷேக் கலீஃபா பின் சயீத்தின் மறைவுக்கு அல் நஹ்யான் குடும்பத்தினருக்கும், அமீரகத்திற்கும் மற்றும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் ஷேக் கலீஃபாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தனது கூட்டத்தைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.