அமீரகம் என்றவுடன் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துகிடக்கும் பாலைவனமும் ஒட்டகங்களும் தான் ஒரு பாரம்பரிய தமிழரின் கண்முன்னால் வரக்கூடியவை. அந்தக் கதையெல்லாம் 1958 ஆம் ஆண்டு வரையில் தான். அப்போதுதான் முதன்முதலில் அமீரகத்தில் பெட்ரோலிய ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அசைக்க முடியாத அமீரக சாம்ராஜ்யத்தின் விதை விழுந்த நாள் அது. கடற்கரை மற்றும் கடற்பகுதிகள் என அடுத்தடுத்து எண்ணெய் ஊற்று இருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட, அமீரகம் அசுர வேகத்தில் வளரத் துவங்கியது. இன்று நாம் பார்க்கும் அமீரகத்தின் அத்தனை பிரம்மாண்டத்திற்கும் காரணம் சந்தேகமே இல்லாமல் இந்நாட்டின் எண்ணெய் வளம் தான்.
சில புள்ளி விபரங்கள்
தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் அமீரகம் ஏழாவது இடத்தில் இருக்கிறது. உலகில் உள்ள மொத்த எண்ணெய் மூலங்களில் 6 சதவீதத்தை அமீரகம் கொண்டுள்ளது.
உலகில் உள்ள மொத்த எண்ணெய் கையிருப்பு 1,650,585,140,000 பேரல்கள் ஆகும். அமீரகத்தின் எண்ணெய் கையிருப்பு 98 பில்லியன் பேரல்கள் ஆகும்.
அமீரகத்தில் உள்ள மொத்த எண்ணெய் வளத்தில் 96 சதவீதம் அபுதாபியில் மட்டும் இருக்கிறது. மீதியுள்ள 6 எமிரேட்களில் வெறும் 4 சதவீத எண்ணெய் மட்டுமே இருக்கிறது.
அதாவது, அபுதாபியில் உள்ள மொத்த எண்ணெய் கையிருப்பு 94.08 பில்லியன் பேரல்களாகும். அதற்கடுத்து அதிகபட்சமாக துபாயில் 2 பில்லியன் பேரல்கள் கையிருப்பு உள்ளது.
அமீரகத்தில் ஒருநாளைக்கு எடுக்கப்படும் பெட்ரோலிய மற்றும் பிற எரிபொருள் நீர்மங்களின் அளவு 4 மில்லியன் பேரல்கள் ஆகும். ஆக, வருடத்திற்கு தோராயமாக 1460 மில்லியன் பேரல்கள்.
ஏற்றுமதி
ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு 2.9 மில்லியன் பேரல்கள் அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அமீரகத்திலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயைப் பெறுவது ஆசியாதான். அமீரகத்தின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 93 சதவீதம் ஆசிய நாடுகளுக்குச் செல்கிறது.
வருமானம்
பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியின் மூலமாக ஆண்டுக்கு 243.1 பில்லியன் திர்ஹம்ஸ் வருமானத்தை அமீரகம் ஈட்டுகிறது. அமீரக மத்தியவங்கி அளித்த தகவலின்படி 2017 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியினால் அமீரகம் பெற்ற வருமானத்தைவிட 13.9 சதவீதம் கூடுதலாக 2019 ஆம் ஆண்டு வருமானம் ஈட்டப்பட்டிருக்கிறது.
(2017 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களால் அரசுக்குக் கிடைத்த மொத்த வருமானம்: 213.5 பில்லியன் திர்ஹம்ஸ்)
அப்படியானால், ஒருநாளைக்கு பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி மூலமாக அமீரகத்திற்கு கிடைக்கும் வருமானம் தோராயமாக 600,000,000 திர்ஹம்ஸ்!!
(மேற்கண்ட அனைத்தும் 2019 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை)