சீனாவிடம் இருந்து எல்-15 ரக போர் விமானம் வாங்க அமீரக பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அமீரகம் சார்பில் ஏற்கனவே அமெரிக்காவுடன் நவீன போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் நாட்டின் ராணுவ தளவாடங்களை பலப்படுத்தும் விதமாக நவீன எல்-15 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது சீன ராணுவ தயாரிப்பான எல்-15 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு உடன்பாடு நிலவிவருகிறது. இதில் மொத்தம் 12 விமானங்களை அமீரகம் சார்பில் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக 36 விமானங்கள் வரை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதை தொடர்ந்து விரைவில் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தங்களில் சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அமைப்பு மற்றும் அமீரகத்தின் பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது.
இவ்வாறு அமீரக பாதுகாப்பு அமைச்சத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.