UAE Tamil Web

அமீரகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லலாம்..!

Nobu-Hotel-Ibiza-

புகழ்பெற்ற சுற்றுலா தளமான ஸ்பெயின் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் தங்களது நாட்டிற்கு சுற்றுலா வரலாம் என தெரிவித்துள்ளது. இதன்படி, உலக சுகாதார ஆணையம் மற்றும் ஐரோப்பியன் மெடிசின் ஏஜென்சி ஆகியவை ஒப்புதல் அளித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நாடுகளில் இருந்து மக்கள் ஸ்பெயின் வரலாம் என அந்நாடு அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகளின் பட்டியலில் சினோபார்ம், பைசர், ஆக்ஸ்போர்டு – செனக்கா, மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இவற்றுள் சினோபார்ம், பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு – செனக்கா ஆகியவை அமீரகத்தில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஜூன் 7, 2021 ஆம் தேதி ஸ்பெயின் தனது எல்லைகளைத் திறக்கிறது. சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் அதற்கு 14 நாட்களுக்கு முன்னர் தங்களது இரண்டாம் டோசை எடுத்திருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஆங்கிலம் அல்லது ஸ்பானிஷ் மொழியில் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்கவேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத மைனர் குழந்தைகளைக்கொண்ட குடும்பங்கள் அவர்களுக்கு PCR பரிசோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும். இருப்பினும் 6 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய வளைகுடா நாடுகளுக்கான ஸ்பெயின் சுற்றுலாத்துறை இயக்குனர் டேனியல் ரோசாடோ,” 2019 ஆம் ஆண்டில் ஸ்பெயின் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 50 சதவீத மக்கள் இந்த வருடம் வருகைபுரிவார்கள் என நம்புகிறோம்” என்றார்.