இந்திய விடுதலை, கல்வி ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் முக்கிய தொண்டாற்றியுள்ளனர் – திமுக எம்பி தமிழச்சி!

Vanakkam Dravidam function at Dubai

சர்வதேச புத்தக கண்காட்சி திருவிழா மற்றும் வணக்கம் திராவிடம் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்து கொண்டார்.

உலக அளவில் மிகப்பெரிய மூன்றாவது புத்தக கண்காட்சி அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் வருடந்தோறும் நடைபெறும். 36வது புத்தகக் கண்காட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 37வது கண்காட்சியில் கனிமொழி கலந்து கொண்டார்கள்.

தற்போது 38-வது கண்காட்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி நவம்பர் 9 வரை சுமார் 2,000 பதிப்பாளர்கள் பங்கேற்புடன் நடந்தது.

இந்த விழாவில் அமீரகத்தின் தேசிய கீதம், இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தமிழ் கலாச்சாரபடி குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழக திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதே அதன் சிறப்பு. தமிழக மக்களும் ஷார்ஜா வாழ் தமிழர்களும் திமுகவுக்கு ஆதரவு அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இஸ்லாமியர்கள் இந்திய விடுதலைக்கும், இலக்கியத்துக்கும், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கும் முக்கிய தொண்டாற்றியுள்ளனர், என்றார்.

மேலும், தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்க கருணாநிதி பாடுபட்டார். இதன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களுக்கும் சொத்துரிமை உள்ளிட்ட திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன, என்று கூறினார்.

இந்த விழாவில் ஷார்ஜா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அரபு நாட்டை சேர்ந்தோரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செண்டை மேளதாளத்துடன் அமீரக திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் சார்பில் மிகப்பெரிய வரவேற்பு அந்த புத்தகத் திருவிழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

Loading...