அபுதாபியில் 13 தொலைபேசி மோசடி கும்பல்கள் கைது.!

gang arrest

அபுதாபியில் 142 பேர் சம்பந்தப்பட்ட 13 தொலைபேசி மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு முதல் சட்டவிரோதமாக அமீரக குடியிருப்பாளர்களிடமிருந்து வங்கி விவரங்களைப் பெற்று பின்னர் அதனை பயன்படுத்தி பணத்தை திருடுபவர்கள் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த மோசடி செய்பவர்கள், பெரும்பாலும் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2019 முதல் பிப்ரவரி 2020 வரை பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதிற்காக சிக்கியுள்ளனர்.

இதில் சில கும்பல்கள், மோசடி அழைப்புகளைச் செய்து, குடியிருப்பாளர்களின் கிரெடிட் கார்டு எண் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பெறுவதற்காக போலி பரிசுகளை தருவதாக உறுதியளித்து ஏமாற்றியுள்ளனர். மற்றவர்கள் வங்கி ஊழியர்களாக நடித்து குடியிருப்பாளர்களின் வங்கி அமைப்புகளில் அவர்களின் கணக்கு விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டியுள்ளனர். விவரங்களைப் பெற்ற பிறகு, மோசடி செய்பவர்கள் அதைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை வங்கி கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து திருடியுள்ளார்கள் என்று அபுதாபி போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடந்த திங்களன்று செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அபுதாபி காவல்துறையினர், 2019 ஆம் ஆண்டில் 525 தொலைபேசி மோசடிகளை பதிவு செய்துள்ளதாக வெளிப்படுத்தினர்.

காவல்துறையினர் இந்த மொபைல் போன் மோசடி பிரச்சாரத்தின் மூன்றாவது பதிப்பை “Be Careful” என்ற பெயரில் தொடங்கியுள்ளனர். இது தொலைபேசி மோசடி செய்பவர்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவே மக்கள் இந்த குற்றவாளிகளுக்கு பலியாக மாட்டார்கள்.

சிஐடி இயக்குனரின் அறிவுரைகள்:

கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைபேசி மோசடிகள் அதிகரித்து வருவதாக அபுதாபி சிஐடியின் இயக்குனர் பிரிகேடியர் இம்ரான் அல் மஸ்ரூய் தெரிவித்தார்.

“தொலைபேசி மோசடிகள், பாதுகாப்பிற்கு அபாயத்தை விளைவிக்கும்
நிகழ்வில் முன்னணியில் உள்ளன. ஏனெனில் இது மக்களின் பணத்தை திருட பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தும் திறமையான மோசடி செய்பவர்களுக்கு இரையாகும் சமூக உறுப்பினர்களை பெரிதும் பாதிக்கிறது” என்று அவர் கூறினார்.

மேலும் “அபுதாபி காவல்துறை மற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, அறியப்படாத தொலைபேசி எண்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பேணுவதற்கும், இதுபோன்ற வழக்குகளை போலீசில் புகாரளிப்பதற்கும் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது.” என்றும் மஸ்ரூய் கூறினார்.

காவல்துறையின் எச்சரிக்கை:

அத்துடன் பிரச்சார சிற்றேட்டில் (brochure), “வாழ்த்துக்கள்!!! நீங்கள் ஒரு பணப் பரிசை வென்றுள்ளீர்கள்” என்று கூறி வரும் செய்தியே எந்தவொரு தொலைபேசி மோசடிக்கும் எப்போதும் முதல் படியாகும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும் “அமீரக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஒருபோதும் தங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கோரவோ அல்லது பணப் பரிசுகளை வென்றதாக தெரிவிக்கவோ அழைப்பு மேற்கொள்வதில்லை. தொடர்பு நிறுவனங்கள் எப்போதும் தங்களது இலவச சலுகைகளையும் விளம்பரங்களையும் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சி சேனல்கள் போன்ற அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மட்டுமே வெளியிடுகின்றன” என்று போலீசார் தெளிவாக விளக்கியுள்ளனர்.

தொலைபேசி மோசடிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகளை 8002626 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...