UAE Tamil Web

40 அடி நீளம்; 15 டன் எடை ; துபாயில் கரையொதுங்கிய பிரம்மாண்ட அரியவகை திமிங்கிலம்..!

WHALE-14

துபாய் கடலில் நேற்று பிரைட் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியது. ஷார்ஜாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆணையம் மற்றும் சயீத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முயற்சியால் திமிங்கல சடலத்தின் முழுமையான நெக்ரோப்சி (பிரேத பரிசோதனை) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் முக்கிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது பிராந்தியத்தில் இந்த திமிங்கில இனத்தின் நிலை மற்றும் சுற்றுச்சூழலை நன்கு புரிந்துகொள்ள உதவும் மேலும் இறுதியில் இந்த உயிரினங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆணையத்தின் தலைவர் ஹனா சைஃப் அல் சுவைதி இதுகுறித்துப் பேசுகையில்,”பிரைட் திமிங்கலத்தின் பிரேத பரிசோதனை குறித்த இந்த பணி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆணையத்தால் ஷார்ஜா ஸ்ட்ராண்டிங் ரெஸ்பான்ஸ் திட்டம் (Sharjah Stranding Response Programme) என்ற பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும். திமிங்கிலத்தினுடைய மரணத்திற்கான காரணங்களை அடையாளம் காண்பது மற்றும் பிற அறிவியல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக நெக்ரோப்சி நடத்தப்பட்டுள்ளது. பிரைட் திமிங்கலங்கள் மென்மையான உடல்களைக் கொண்டுள்ளன, அவை மேலே கருமையான சாம்பல் நிற தோலையும், கீழே வெள்ளை தோலையும் கொண்டுள்ளன, அவை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மட்டுமே காணப்படுகின்றன” என்றார்.

ஜெபல் அலி கால்வாயில் திமிங்கலம் இறந்து கிடப்பதை அறிந்த டிபி வேர்ல்ட் நிறுவனத்தின் அவசர குழு, திமிங்கிலத்தை துறைமுகத்திற்கு கொண்டு சென்றது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. முழுமையான பிரேத பரிசோதனை செய்யக்கூடிய பகுதிக்கு திமிங்கிலத்தின் உடல் கொண்டுசெல்லப்பட்டது.

NAT-WHALE-1-
Image Credit: Gulf News

திமிங்கிலம் 12.38 மீட்டர் நீளமும், 15 டன் எடையும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் கடல் குப்பைகள் சிக்கியமை அல்லது கப்பல் தாக்குதல்கள் பற்றிய தெளிவான ஆதாரங்கள் எதுவும் தெரியவில்லை. வயிற்றில் உணவின் எந்த தடயமும் இல்லை. பல உறுப்புகளில் பல ஒட்டுண்ணிகள் காணப்பட்டன. மேலும் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், விலங்குகளின் பல்வேறு உறுப்புகளின் நிலை, நச்சுபொருட்களின் அளவுகள் மற்றும் திமிங்கிலத்தின் மரபணு அமைப்பு ஆகியவற்றை சரிபார்க்க பயன்படுத்தப்படும்.

பிரைட் திமிங்கலம் மிகவும் அரிதானது. அவை அரேபிய வளைகுடா மற்றும் அரேபிய கடலில் பரவலாக உள்ளன. இரண்டு வகையான பிரைட் திமிங்கலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இரண்டு வெவ்வேறு கிளையினங்களைக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வரலாற்று ரீதியாக பார்த்தோமானால், அரபு பிராந்தியத்தில் பிரைடின் திமிங்கலங்கள் சோவியத் காலத்தில் வேட்டையாடப்பட்டன. 1960 களின் நடுப்பகுதி வரை இது தொடர்ந்தது. இக்காலகட்டத்தில் 849 திமிங்கலங்கள் கொல்லப்பட்டன. அரபு பிராந்தியத்திலும் அமீரகத்தின் நீரிலும் இந்த இனத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் எண்ணிக்கை குறித்து எந்த மதிப்பீடும் இல்லை.

ஷார்ஜாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழலையும் அதன் இயற்கை இருப்புக்கள், வனவிலங்குகள் மற்றும் அவற்றின் பல்லுயிர் தன்மையையும் பாதுகாக்க முயல்கிறது. இந்த ஆணையம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் திட்டங்களுக்கான கொள்கைகளை செயல்படுத்துகிறது.

WHALE-14
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap