UAE Tamil Web

டாக்ஸி டிரைவர்களை கவுரவப்படுத்த அசத்தல் திட்டத்தை அறிவித்த துபாய் RTA..!

Dubai-Taxi_

உலகின் மிகவும் பிசியான நகரங்களில் ஒன்றான துபாயில் நாள்தோறும் பலபேர் டாக்ஸிக்களை நம்பியே தங்களது அன்றாடப் பணிகளை செய்துவருகின்றனர். இருப்பினும் நம்மை யார் டாக்சிக்களில் அழைத்துச் செல்கிறார் என்பதை நாம் அறிய முற்பட்டதில்லை. டிரைவர் என்று சொல்லாதீர்கள். என்றாவது ஒருநாள் டாக்சி பயணத்தின்போது அவருடைய பெயரைக் கேட்டிருக்கிறீர்களா? கொரோனாவிற்குப் பின்னர் முகக்கவசம் என்னும் பூட்டு நமது முகத்தில் பூட்டப்பட்ட பின்பு இந்த நிலைமை இன்னும் மோசம்.

துபாய் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள டிரைவர்களின் நிலை இதுதான். அவர்களுக்கென்று தனித்த அடையாளம் நம்முடைய வேகத்தில் காணாமல் போகும் சூழ்நிலை வெகுகாலத்திற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. இதனைத் தடுக்கும் விதமாக WhosYourCabbie (உங்களுடைய கேப்டன் யார்) என்னும் திட்டத்தைத் துவங்கியுள்ளது துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).

இதுகுறித்து வீடியோ ஒன்றினை RTA தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், டிரைவர்களை நாம் பிரதர், ப்ரோ, டாக்ஸி உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கிறோம். அவர்களுக்கென்று தனித்த அடையாளம் இருக்கிறது. நம்முடைய அன்றாட வேலைகள் சரிவர இயங்க நமக்குத் துணை நிற்பவர்களை இனி நாம் பெயர் கூறி அழைப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டாக்சிக்களின் மேல் உள்ள டாக்ஸி போர்டு அகற்றப்பட்டு, டிரைவரின் பெயர் பொறிக்கப்பட்ட போர்டு பொருத்தப்படும். ஆகவே, துபாய் முழுவதும் இனி டாக்சிகளை அதன் ஓட்டுனர் பெயர்கொண்டே அழைக்கலாம். கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் நமக்காக பணியாற்றிவரும் டாக்ஸி டிரைவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இது என RTA தெரிவித்துள்ளது.

துபாயின் சிறப்பிடங்கள், காலநிலை, உணவகங்களின் விலை என எதை வேண்டுமானாலும் நீங்கள் டிரைவரிடம் கேட்கலாம். ஆனால் உங்களுடைய டிரைவரின் பெயர் என்ன என்பது எங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே RTA வின் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Dubai-Taxi_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap