UAE Tamil Web

தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு மறக்க முடியாத பரிசளித்த எதிசலாட்..!

etisalat-

துபாயில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருந்த 15 தொழிலாளர்களுக்கு ஒரு புதிய இடத்தில் வேலை எனத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த இடத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். அவர்களிடம் டைல்ஸ் ஒப்படைக்கப்பட்டு அவற்றை ஒட்டுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

பணி ஒருகட்டத்தை எட்டியதும், டைல்ஸ்-ல் எதோ ரகசிய செய்தி மறைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இறுதியில் அந்த டைல்ஸ்-ல் “நீங்கள் இன்று உருவாக்கியுள்ளீர்கள். உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம்” (You’ve built today, so let us build your child’s tomorrow’) என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 25,000 திர்ஹம்ஸ் நிதியுதவி அளிப்பதாக எதிசலாட் தெரிவிக்க, ஆனந்தக்கண்ணீரில் நனைந்திருக்கின்றனர் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களில் இந்தியர் ஒருவரான ஷேக் ரியாசுதீன் (34) கடந்த வருடம் துபாய்க்கு வேலைக்காக வந்திருக்கிறார். இன்ப அதிர்ச்சியுடன் எதிசலாட்டின் உதவியைக் கேட்டறிந்த ஷேக்,” இந்தத் தொகையைக்கொண்டு எனது வளர்ப்பு மகளின் கல்விச் செலவை என்னால் ஏற்கமுடியும். இந்த உலகத்தை எனது மகள் தனது சொந்தக்காலில் நின்று எதிர்கொள்ள வேண்டும். அவளுடைய கல்வி குறித்த அச்சம் இப்போது என்னைவிட்டு நீங்கிவிட்டது” என்றார்.

ஒவ்வொரு வருடமும் மே 1 ஆம் தேதி உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமீரகத்தில் மட்டும் சுமார் 22 லட்ச நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் உள்ளனர்.

பரிசுபெற்ற தொழிலாளர்களில் ஒருவரான அப்துல் லத்தீப் அவான் (65) பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்தவர். இரு குழந்தைகளுக்குத் தந்தையான அவான் இதுகுறித்துப் பேசுகையில்,”நான் 38 ஆண்டுகளாக அமீரகத்தில் இருக்கிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு இத்தனை சீக்கிரம் பலன் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எதிசலாட் நிறுவனம் இத்துணை பெரிய பரிசை அளிக்கும் என்பதையும்தான். என் ஆயுள் முழுவதும் இந்தப் பரிசினை நன்றியோடு நினைவுகூர்வேன்” என்றார்.

எதிசலாட் குழுமத்தின் பெருநிறுவனங்களுக்கான தகவல் தொடர்புத் துறையின் துணைத் தலைவர் டாக்டர்.அகமது பின் அலி இதுகுறித்துப் பேசுகையில்,”அமீரகத்தின் வெற்றிக் கதையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என எதிசலாட் கருதுகிறது. அமீரக சமூக மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானவை. ஆகவே அவர்களுடைய தியாகங்களுக்கும் கடின உழைப்பிற்கும் மதிப்பு செய்ய இந்த தொழிலாளர் தினத்தில் நாங்கள் முடிவெடுத்தோம்” என்றார்.

etisalat-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap