UAE Tamil Web

உயிருக்குப் போராடும் 16 மாத குழந்தை: அமீரக தலைவர்களிடம் மன்றாடிய தாய் – கலங்கவைக்கும் வீடியோ..!

baby

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரியவகை மரபணு நோயினால் பாதிக்கப்பட்டு துபாயில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈராக்கைச் சேர்ந்த லவீன் என்னும் சிறுமியின் மருத்துவ செலவை ஏற்பதாக அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து அதே குறைபாடுள்ள மற்றொரு 16 மாதக் குழந்தை சிகிச்சைக்குப் பணமில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடிவருகிறது.

ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (SMA) என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிஷா ஹசன் இப்ராஹீம் தற்போது அமீரக தலைவர்களின் கருணையை எதிர்நோக்கியுள்ளது. சுமார் 80 லட்சம் திர்ஹம்ஸ் செலவாகும் இந்த நோய்க்கான சிகிச்சை கட்டணத்தை செலுத்த தங்களிடம் வசதியில்லை எனவும், அமீரகமும் அதன் தலைவர்களும் தனது மகளைக் காப்பாற்றுவார்கள் என தான் நம்புவதாகவும் ஆயிஷாவின் தாய் மரியம் தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவின் நிலை குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ள மரியம் அதில்,” இந்த நோய் எனது மகளின் தசை மற்றும் சுவாசத்தை வெகுவாகப் பாதித்துவிட்டது. அவளால் மற்ற குழந்தைகளைப் போல சுவாசிக்கவோ உணவு உட்கொள்ளவோ முடியவில்லை. மருத்துவர்களின் உதவியுடன் மட்டுமே அவள் தற்போது சுவாசித்து வருகிறாள். ஆனால் அவளுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்படவில்லை. ஒருவேளை வெண்டிலேட்டர் பொருத்தும் நிலைமை வந்துவிட்டால் அதன்பின்னர் சிகிச்சை அளித்தும் பலனில்லாத சூழலுக்கு அவள் சென்றுவிடுவாள் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில்,” நன்மையின் தேசமான அமீரகமும் அதன் தலைவரான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், துபாயின் ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் எனது குழந்தைக்கு கருணைகாட்ட வேண்டும்” என மரியம் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

சிரியாவை பூர்வீகமாகக் கொண்ட மரியம் தற்போது அஜ்மானில் வசித்துவருகிறார். அனைத்திற்கும் அல்லாவிற்கு நன்றி தெரிவிப்பதாக மரியம் கலங்கிய கண்களுடன் தெரிவித்தார்.

வீட்டிலேயே ஆயிஷாவிற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவந்தாலும், கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி, அவளது உடல்நிலை மோசமானதால் உடனடியாக துபாயில் உள்ள மருத்துவமனைக்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் ஆயிஷாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிவரும் இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து, ஆயிஷா நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுவருகின்றனர்.

baby
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap