UAE Tamil Web

ஷார்ஜா: பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறிய ஏசி – பணியின்போது பரிதாபமாக பலியான தொழிலாளர் – மேலும் இருவர் படுகாயம்..!

The-building-

ஷார்ஜாவின் அல் வஹ்தா சாலையில் உள்ள 22 தளங்களைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பராமரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென ஏசி கம்ப்ரசர் வெடித்துச் சிதறியதால் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் அல் காசிமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

50 அபார்ட்மெண்ட்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் ஏசி சரியாக வேலை செய்யாததால் பராமரிப்பு நிறுவனம் தனது செலவில் இங்கு தங்கியிருந்த குடியிருப்பாளர்களை அருகில் உள்ள ஹோட்டலில் தங்கவைத்திருக்கிறது. இதனையடுத்து நிறுவனத்தைச் சேர்ந்த 5 பணியாளர்கள் ஏசியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள கம்ப்ரசரை பார்வையிடும் போது பலத்த சப்தத்துடன் அது வெடித்துச் சிதறியிருக்கிறது.

ஷார்ஜா காவல்துறை தலைமையகத்தில் உள்ள காவல்நிலைய விரிவாக்க இயக்குனர் கர்னல் யூசப் பின் ஹார்மோல்,”நேற்று காலை 11 மணிக்கு இந்த விபத்துகுறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பலத்த சப்தத்துடன் கம்ப்ரசர் வெடித்துச் சிதறியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அவருடைய உடல் பிணக்கூராய்விற்காக பிணவறைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. காயமடைந்த இருவர் அல் காசிமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். தடயவியல் மற்றும் தீவிபத்து நிபுணர்கள் இந்த விபத்து குறித்து ஆராய்ந்துவருகின்றனர்” என்றார்.

இதுகுறித்துப் பேசிய பராமரிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,” ஏசி பராமரிப்பிற்காக 5 தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகத்திற்குச் சென்றனர். சில உபகரணங்களை எடுத்துவர ஒருவர் மட்டும் கீழே வருகையில் இந்த விபத்தானது நிகழ்ந்திருக்கிறது. ஏசி வேலை செய்யாததால் அங்கு வசித்துவந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் எங்களது செலவில் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

புஹைரா காவல்நிலையம் இந்த விபத்துகுறித்து விசாரணை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The-building-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap