UAE Tamil Web

“இப்போது இல்லையென்றால் எப்போது செய்யப்போகிறோம்” – துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட வேற லெவல் அறிவிப்பு..!

sheikhs

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி, வெள்ளி கிரகம் மற்றும் 7 குறுங்கோள்களை ஆராய விண்கலத்தினை அமீரகம் ஏவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் 50 வது ஆண்டுவிழாவினை முன்னிட்டு துவங்கப்படும் 50 முக்கிய திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.

செவ்வாய் கிரகத்திற்கு ஹோப் விண்கலத்தினை வெற்றிகரமாக செலுத்திய அமீரக விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வெள்ளிக் கோளுக்கான பயணத்தை 2028 லிருந்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்கலனைத் தயாரிக்க 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய திட்டத்தின்படி ஆராய இருக்கும் குறுங்கோள்களில் ஒன்று 3.6 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்திற்காக ஹோப் விண்கலம் பயணித்த தொலைவைக் காட்டிலும் 7 மடங்கு தொலைவை இப்புதிய விண்கலம் கடக்க இருக்கிறது.

இது குறித்து துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்”வானத்தில் மூன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்களுக்கு அரபு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஏனென்றால் அரேபியர்கள் வானியலின் முன்னோடிகள். அரபு நாகரிகத்தின் பெருமையை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். இன்று நாம் செயல்படவில்லை என்றால், எப்போது செய்வோம்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில்,” விண்வெளி மற்றும் ஆராய்ச்சியில் நமது புரிதலை அதிகரிக்க நிச்சயம் இப்புதிய திட்டம் பங்களிப்பு செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

sheikhs
9 Shares
Share via
Copy link