37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

“அம்மா விரைவில் வந்துவிடுவேன்” வீடியோவில் தோன்றிய அம்மாவைப் பார்த்து அழுத குழந்தை – மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக சுகாதாரத்துறை வெளியிட்ட கண்கலங்க வைக்கும் வீடியோ..!

uae-healthworkers,-frontliners,-covid-19,-dubai,-abu-dhabi,-eid-al-adha-surprise

வீடு, குழந்தைகள், உணவு, உறக்கம் என அத்தனையையும் மறந்து கொரோனாவிற்கு எதிரான போரில் அமீரகத்தின் கரங்களை வலுப்படுத்தும் மருத்துவப் பணியாளர்களை இந்த தியாக திருநாளின் போது மகிழ்ச்சியின் பெருங்கடலில் தவிக்க விட்டிருக்கிறது அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் (Mohap).

கொரோனா போராட்டத்தில் பங்குபெற்றுள்ள மருத்துவ பணியாளர்களின் குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஏற்பாடு ஒன்றினை செய்திருக்கிறது Mohap.

அமைச்சகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், இந்த குழந்தைகள் அனைவரும் ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழைகின்றனர். பல இரவுகளில் அப்பாவின் அன்பையும் அம்மாவின் அணைப்பையும் இழந்து இந்த கொடுமையான காலத்திற்கான சான்றாக நிற்கும் அந்த பிஞ்சு குழந்தைகள் அனைவரும் படம் பார்க்க வந்திருப்பதாய் உணர்கின்றனர்.

ஆனால், அவர்களுக்கு முன்னால் விரிந்திருக்கும் திரையில் திடீரென ஒளிக்கீற்றுகள் மின்னி, தங்களது பெற்றோர்கள் பேசும் வீடியோ திரையில் மெல்ல ஓடத் துவங்குகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத குழந்தைகளின் கண்கள் திரையைவிட அகலமாய் விரிகின்றன.

அழுகையும், விசும்புதலுமாக நின்ற குழந்தை ஒன்றின் தாயார் திரையில்,” “அம்மா விரைவில் வந்துவிடுவேன். உனக்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்க பிரம்மிப்புடன் திரையைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு சிறுவனான ஷாஹித்தின் தாய், ” நீதான் என் இதயம். உன்னால் அதனைப் பார்க்க முடிகிறதா? உனக்காகத்தான் இது” என்றபடி கைகளால் இதயத்தின் குறியீடை ஜாடை காண்பிக்கிறார்.

வீடியோ முடியும் வரையில் திரைக்குப் பின்னால் இருந்த பெற்றோரை குழந்தைகளால் பார்க்க முடியவில்லை. வீடியோ முடிந்த பிறகு உண்மையான இன்ப அதிர்ச்சியை அந்த குழந்தைகளுக்கு அமைச்சகம் அளிக்கிறது.

திரைக்குப் பின்னால் இருந்து குழந்தைகளின் பெற்றோர் வெளிவருகிறார்கள். குழந்தைகள் மேடையை நோக்கி ஓடி தங்களுடைய அம்மாவை/அப்பாவை வாரியணைத்துக்கொள்கிறார்கள். இத்தனை நாளாய் நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த அத்தனை பிரியமும், அத்தனை அன்பும், அத்தனை ஏக்கமும் கண்ணீராக வெளிவருகிறது.

உணர்ச்சியின் உயரங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் அந்த வீடியோ, இப்படி முடிகிறது: “உங்களுடைய பொறுமைக்கு நன்றி. இந்த ஈத் பெருநாள் எல்லோர்க்கும் ஆசிர்வதிக்கப்பட்ட தினமாக இருக்கட்டும்”.

அந்த நெகிழ்ச்சியான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாசகர்களுக்கும் அமீரகத்தின் கொரோனா போராட்டத்தில் பங்குபெறும் அத்தனை மக்களுக்கும் ஈத் அல் அத்ஹா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது UAE Tamil Web குழு.

இதையும் படிங்க.!