“பாம்பென்றால் படையும் நடுங்கும்” என்று பழமொழி கேள்விப்பட்டிருப்போம். சிறிய பாம்புக்கே அலறியடித்து ஊரைக்கூட்டும் ஆட்கள் நாம். 21 அடி நீளத்தில் 115 கிலோ எடையுடன் ஒரு பாம்பைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படியான உலகின் மிகப்பெரிய பாம்பை (உயிருடன் உள்ள) அமீரகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிறந்த உலகின் மிக நீளமான மலைப்பாம்பான Reticulated python இப்போது அபுதாபியின் அல் கானாவில் உள்ள தி நேஷனல் அக்வேரியத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
சாதாரணமாக 5 மீட்டர் நீளமுடன் காணப்படும் இந்த வகைப்பாம்புகள் 10 மீட்டர் வரையிலும் வளரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மனித தொந்தரவு இன்றி, கடந்த 14 ஆண்டுகளாக வளர்ந்த இந்த மலைப்பாம்பு, இப்போது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.
இது விஷமற்றது எனினும் தனது இரையைச் சுற்றி, இறுக்கி அதனைக் கொன்று விழுங்கும் வல்லமை கொண்டது. ஒரு சிறிய நபரை விழுங்கக்கூடிய அளவுக்கு இதன் வாய் விரிந்து கொடுக்கும் தன்மையுள்ளதாம்.
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் உள்ள இவ்வகையைச் சேர்ந்த மலைப்பாம்புகள் மனிதர்களை உணவாக கொள்கின்றன எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், பொதுவாக மனிதர்களை இந்த மலைப்பாம்புகள் அரிதாகவே தாக்குகின்றன என்கிறார்கள்.
தென் மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிகம் காணப்படும் இவ்வகைப் பாம்பினை பராமரிக்க தி நேஷனல் அக்வேரியத்தில் இந்த பாம்பிற்காக சுமார் 8000 வகையான இயற்கை அமைப்புகளை நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
எது எப்படியோ, சற்றே தூரத்தில் இருந்தே இந்த ராட்சத பாம்பைப் பார்ப்பது உசிதம்.