fbpx
19.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

ஒரேயொரு Missed Call மட்டும் போதும் உங்களுடைய பணம் மொத்தம் காலி – அச்சுறுத்தும் “வாங்கிரி” திருடர்கள் – எச்சரிக்கும் காவல்துறை..!

Wangiri-Fraud

அமீரக குடியிருப்பாளர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் காவல்துறை முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சர்வதேச மொபைல் எண்ணிலிருந்து உங்களுடைய செல்போனுக்கு Missed Call வந்தால் மீண்டும் அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக வாங்கிரி மோசடி (Wangiri Fraud) என்றழைக்கப்படும் இந்தத் திருட்டில், வசதியான இடங்களில் இருந்து வரும் அழைப்புகளில் இருந்து திருடர்கள் பணத்தினைப் பெறுகிறார்கள். அதாவது, உங்களுக்கு Missed Call ஆகியிருக்கும் எண்ணிற்கு நீங்கள் மீண்டும் அழைத்தால், திருடர்கள் பணம் பெறுவார்கள்.

நீங்கள் அதிகநேரம் இணைப்பில் இருக்க வேண்டும் என்பதாலேயே, பதிவு செய்யப்பட்ட கணினிக் குரல்களை அவர்கள் ஒலிக்க விடுவதுண்டு.

ஜப்பானிய சொல்லான வாங்கிரிக்கு அர்த்தம் ஒரு ரிங்கோடு துண்டித்தல் ஆகும். இதனடிப்படையிலேயே இந்த மோசடி நடைபெறுகிறது. பிரீமியம் இணைப்பிற்காக தொலைத் தொடர்பு ஆப்பரேட்டருடன் வருவாயைப் பகிர்ந்து கொள்ளும்போது மோசடி செய்பவர்கள் இந்த வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள்.

இத்தகைய இணைப்புகளை எடுத்துக்கொள்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து குறைவாக கண்காணிக்கும் நாடுகள் மூலமாக இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த Missed Call-கள் நவுறு (Nauru), லைபீரியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகமாக வருகின்றன.

போன்கால் முடிந்தபிறகு உங்களிடம் இருந்து கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய டேட்டாவை அபகரித்தல் மற்றும் ஹேக்கிங் முயற்சிகளையும் இந்த மோசடிக்காரர்கள் மேற்கொள்வார்கள்.

இம்மாதிரியான Missed Call-களைப் பொருட்படுத்த வேண்டாம் எனவும், உண்மையாக உங்களிடம் பேச நினைப்போர் மீண்டும் அழைக்கவோ அல்லது அழைப்பிற்கான காரணத்தை குறுஞ்செய்தி வாயிலாகவோ தெரிவிப்பார்கள் எனவும் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். பொதுமக்கள் 901 அல்லது புகாருக்கான வழக்கமான எண்களில் தொடர்புகொண்டு இந்த மோசடி குறித்து புகாரளிக்கலாம். இல்லையெனில் உங்களுடைய நெட்வொர்க் வழங்கு நிறுவனத்திடமே (டூ அல்லது எதிசலாட்) இதுகுறித்து புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!