UAE Tamil Web

அமீரகம்: மாணவர்களுக்கு விவசாயத்தை கட்டாய பாடமாக்கிய இந்தியப் பள்ளி..!

NAT-SS-farming-at-habitat-schools-

இன்டர்நெட் கோடிங், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாணவர்களை தயாராக்கிவரும் ஹெபிடேட் ஸ்கூல்ஸ் நிர்வாகம் தனது மாணவர்களுக்கு விவசாயத்தையும் கட்டாய பாடமாக போதித்துவருகிறது. அஜ்மானை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் ஹெபிடேட் ஸ்கூல்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள 3 பள்ளிகளும் விவசாயத்தை போதித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் கடந்த 5 வருடங்களில் 7.4 டன் காய்கறிகளை விளைவித்தும் காட்டியிருக்கிறது இப்பள்ளி நிர்வாகம்.10 வருடங்களுக்கு முன்னரே தனது பாடத்திட்டத்தில் விவசாயத்தை ஒரு பிரிவாக சேர்த்திருக்கிறது இந்த CBSE பள்ளி.

இதுகுறித்துப் பேசிய ஹெபிடேட் ஸ்கூல்ஸ் நிர்வாகத்தின் தலைவர் ஷம்சு ஸமான்,” தொழில்நுட்பமும் கலாச்சாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்த கல்வியை நாங்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்தோம். கோடிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்களும் இங்கே அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அவர்கள் டிஜிட்டல் உலகத்தில் வாழ இருக்கிறார்கள். அதற்கு அவர்களை தயார் செய்தல் வேண்டும். அதே நேரத்தில் இயற்கையை நேசிக்கவும் இந்த உலகை இயங்கச் செய்யும் வேளாண்மை பற்றியும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். உயிர்களை நேசிக்கவும் நமக்கெல்லாம் உணவை வழங்கும் விவசாயிகளை மதிக்கவும் மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.

மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக வளாகத்தில் 2,272 மரங்கள் மற்றும் 1173 செடிகளை வளர்த்துவருகிறது இப்பள்ளி நிர்வாகம். மொத்தம் 75 வகையான மரங்கள் இங்கே வளர்கின்றன எனவும் இவற்றில் பெரும்பாலானவை மருத்துவகுணம் கொண்டவை என்கிறார் வேளாண்மை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் என்கிறார் பிரதீபா.

2019 ஆம் ஆண்டில், ஹெபிடேட் ஸ்கூல்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள இம்மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 10,000 மாணவர்கள் விதைகளிலிருந்து மரக்கன்றுகளை வளர்க்கும் ‘விதை முதல் நடவு’ முயற்சியில் பங்கேற்று, அதிக அளவில் மரக்கன்றுகளை விநியோகித்ததற்காக கின்னஸ் உலக சாதனையை முறியடித்தனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக வளர்ந்த 9,371 மார்னிங்கா, செஸ்பினா மற்றும் காஃப் செடிகள் நகரம் முழுவதும் நடுவதற்கு அஜ்மான் நகராட்சியின் வேளாண் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பள்ளியில் கோடைகால விடுமுறையின் போது கொடுக்கப்படும் முக்கிய ஹோம் வொர்க் மரக்கன்றுகளை நடுவதுதான். ஒவ்வொரு கோடைகால விடுமுறையின் போதும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். அவற்றை மாணவர்கள் தங்களது வீடுகளில் வளர்க்க வேண்டும்.

இப்படி 2018 – 2021 ஆம் ஆண்டுகளில் இப்பள்ளியின் மாணவர்கள் 39,826 மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். உச்ச சபையின் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுவைமி அவர்களின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு அஜ்மானில் உள்ள இரு பூங்காக்களில் 40 செடிகளை இப்பளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நட்டனர்.

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வேளாண்மை குறித்த இப்பள்ளியின் புத்தகமும் இடம்பெற்றிருந்தது. நாளைய தலைமுறையை உருவாக்கும் பிஞ்சுகளின் கைகளில் கணினியும் கலப்பையும் சேர்ந்தே இருக்க வேண்டும் எனும் இப்பள்ளியின் சிந்தனை நிச்சயம் போற்றுதலுக்குரியது.

NAT-SS-farming-at-habitat-schools-
4 Shares
Share via
Copy link