UAE Tamil Web

அமீரக வெயிலைத் தாக்குப்பிடிக்க… வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. தொழிலாளர்கள் மகிழ்ச்சி..!

NAT-AC-HELMET--VIRENDRA

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றன. இதில் இந்திய பெவிலியனில் வைக்கப்பட்டுள்ள ஏசி பாதுகாப்பு ஹெல்மெட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜார்ஷ் சேஃப்டி நிறுவனம் இந்த ஹெல்மெட்டை கண்டுபிடித்திருக்கிறது. அமீரகத்தில் நிலவும் அதிக வெப்பத்திலும் தொழிலாளர்கள் சிரமமின்றி பணிபுரியும் விதத்தில் இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் இந்நிறுவனத்தின் CEO வான கௌஷ்தீப் கௌந்தின்யா.

பல்வேறு அமீரக நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்காக இந்த ஹெல்மெட்டை வாங்க உத்தேசித்திருக்கின்றன. சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பேட்டரியினால் இந்த ஏசி ஹெல்மெட் இயங்குகிறது. இதில் மொத்தம் 4 வகையான ஹெல்மெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவை குறித்து கீழே காணலாம்.

மாடல் C: மிஷின் ஆப்பரேட்டர்களுக்கானது. மிஷினின் குறை மின்னழுத்த மூலத்தினுடன் ஹெல்மெட் இணைக்கப்படும். இதனால் நீண்ட நேரத்திற்கு ஊழியரால் சிரமமின்றி பணிபுரிய முடியும்.

மாடல் S : திறமை வாய்ந்த டெக்னீஷியன்களுக்கானது. பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த ஹெல்மெட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரையிலும் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாடல் E : நிர்வாகிகள், ஆர்க்கிடெக்ட் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபடும் வேளையில் உபயோகிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும்.

மாடல் W : வெல்டிங் பணியலர்களுக்கானது. இரண்டு மணிநேரம் தாக்குப் பிடிக்கும் வகையில் பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஹெல்மெட்டில் வெல்டிங் செய்யும் போது ஊழியரின் கண்களைப் பாதுகாக்க சிறப்பு லேயர் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கௌந்தின்யா,” பாதுகாப்பு ஹெல்மெட்கள் 1919 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தவை. அதிலிருந்து சுமார் நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும் ஹெல்மெட்களில் புதிய மாற்றங்கள் ஏதும் வரவில்லை. நாங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த ஏசி ஹெல்மெட்டின் மாதிரியை உருவாக்கினோம். அதில் வெற்றியடைந்து தற்போது எங்களுடைய உலகத்தரத்திலான ஏசி ஹெல்மெட் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளன” என்றார்.

இன்னும் சில காலங்களில் அமீரகத்தின் கொளுத்தும் வெயிலையும் தாக்குப்பிடிக்கும் இந்த ஹெல்மெட்கள் நமது தொழிலாளர்களின் சிரமங்களை குறைக்கும் என்றே நம்பலாம்.

NAT-AC-HELMET--VIRENDRA
17 Shares
Share via
Copy link