சவுதி அரேபியாவில் நிலவும் கடும் பனி காரணமாக, ஒட்டகத்தின் கண்ணில் இருந்து வந்த கண்ணீர், உறைந்து காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதியில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் பனி நிலவி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒட்டகத்தின் கண்களில் இருந்து நீர் வடியும் போது, அது உறைந்து போவதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#طريف بعد تصدر المشهد كأبرد مدينة سعودية في العقود الـ3 الماضية..
شدة البرد يُجمّد يوم أمس دموع الأبل.
— أخبار السعودية (@SaudiNews50) January 19, 2022
கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவின் பல நகரங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்து வருகிறது. ஆறு வடக்கு நகரங்களில், வெப்பநிலை -3 செல்சியஸாகக் குறைந்ததால், பார்க்கும் இடமெல்லாம், வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனியால் மூடப்பட்டுள்ளது.
வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள துரைஃப் நகரில் புதன்கிழமை -6 டிகிரி செல்சியஸ் பதிவானது, இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.
வெள்ளிக்கிழமை, ஜோர்டானின் எல்லைக்கு அருகிலுள்ள துரைஃப் பகுதியில் பதிவான வெப்பநிலை -3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. ஜோர்டானின் எல்லையில் உள்ள குரையாத் நகரில் வெப்பநிலை -2 டிகிரியாக குறைந்தது. நாட்டின் வடக்குப் பகுதியிலும் இதே நிலையே நீடித்தது.
வார இறுதியில் குளிர்காலம் கடுமையாக இருக்கும், தலைநகர் ரியாத்தில் உறைபனி வெப்பநிலை -3 டிகிரியை எட்டும் என தேசிய வானிலை மைய அறிக்கை தெரிவிக்கிறது. சைபீரியாவில் இருந்து வரும் கடும் குளிரான ஆர்க்டிக் காற்று தற்போது சவுதி அரேபியா முழுவதும் வீசி வருகிறது.
சவூதி அரேபியாவின் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் வார இறுதிக்குள் வெப்பநிலையில் இன்னும் குறையும் என தேசிய வானிலை மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார். ரியாத்தில் பூஜ்ஜியத்திற்கு கீழே ஒன்று முதல் மூன்று டிகிரி வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
கடும் குளிர் நிலவுவதால், வாடிக்கையாளர்கள் ஹீட்டர்களுக்கு அருகில் உட்கார விரும்புவதால் பல கஃபேக்களில் வெளிப்புற இடங்கள் காலியாக காணப்பட்டன.