அமீரகத்தில் கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.
அதன் எதிரொலியாக அமீரகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அவசர நெருக்கடி மற்றும் தேசிய ஆணையத்தின் பேரிடர் மேலாண்மையான (NCEMA) அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு எமிரேட்ஸும் தங்களது கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் அபுதாபி அரசு கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
புதிய வழிகாட்டு முறைப்படி, அபுதாபி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா நோயினால் பாதிப்பு இல்லாத நாடுகளாக கருதப்படும் பட்டியலான கிரீன் லிஸ்ட்-ஐ அறிமுகப்படுத்தியது. அதாவது கிரீன் லிஸ்டில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் கிரீன் லிஸ்டில் இல்லாத நாட்டு பயணிகள் அபுதாபி வந்தவுடன் கூடுதல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருந்தது.
தற்போது கிரீன் லிஸ்ட் நாடுகளின் பட்டியலை நீக்கி விட்டு அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை அபுதாபி அரசு வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த வழிமுறைகள் 26-02-2022 இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் அபுதாபி வரும் அனைத்து பயணிகளுக்கும் PCR பரிசோதனை, தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனால் உட்புற இடங்களில் முகக் கவசம் அணிந்துக் கொள்ள வேண்டும். மேலும் தொழிலார்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அபுதாபி எல்லையில் நுழைவுக்கு வைக்கப்பட்டுள்ள EDE ஸ்கேனர் மற்றும் கிரீன் பாஸ் நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினசரி PCR சோதனைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அபுதாபி அரசு அலுவலகங்களுக்குள் நுழைய அனைத்து தொழிலாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கிரீன் பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களில் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ ரீதியில் விலக்கு பெற்றவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் அரசு அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.