அமீரகத்தின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வரிசையில் வெளியுறவு வர்த்தகத்துறையின் இணை அமைச்சரான டாக்டர் தானி அல் செயுதி புதிய வகை விசா குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் படி வெளிநாட்டினர்களை அமீரகத்திற்கு வருவதை ஊக்குவிக்கும் விதமாக கிரீன் விசா, ஃப்ரீலான்ஸ் விசா உள்ளிட்ட புதிய வகை விசாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
கிரீன் விசா மூலம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்யலாம். இதேபோல கிரீன் விசாவை கொண்டு ஒருவர் தனது மகனுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்ய முடியும். 18 வயதாக இருந்த உச்ச வரம்பு தற்போது 25ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல திருமணம் ஆகும் வரை மகளின் ரெசிடன்சி விசாவுக்கு பெற்றோர்கள் ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. விசா காலாவதியானதும் புதிய விசா விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே 30 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதிய தொழில் வல்லுநர்களை ஈர்க்கும் விதமாக அவர்களுக்கென ஃப்ரீலான்ஸ் விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மனிதாபிமான அடிப்படையில் கணவனால் கைவிடப்பட்ட அல்லது விதவையான பெண்கள் வேலைக்கிடைக்கும் வரை அமீரகத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 வயதுக்கும் அதிகமான குழந்தைகள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்காலிக பணி அனுமதி சான்றுடன் கூடிய விசா வழங்கப்படும். படிப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் திறனை வளர்த்துக் கொள்ள இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமீரக அரசின் புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
