UAE Tamil Web

அமீரக திர்ஹம்கள் எங்கு அச்சிடப்படுகின்றன தெரியுமா..? – திர்ஹம்ஸ் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்..!

DIRHAMS

திர்ஹம்ஸ். அமீரக ஐஸ்வர்யத்தின் நித்திய சாட்சியாக இருக்கும் திர்ஹம்ஸ் ஒருகாலத்தில் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அமீரகத்திலேயே திர்ஹம்ஸ் அச்சடிக்க ஆரம்பிக்கப்பட்டன. சரி, எப்போதிலிருந்து இந்த திர்ஹம்ஸ் புழக்கத்திற்கு வந்தது என்னும்  வரலாற்றைச் சுருக்கமாக பார்த்துவிட்டு வருவோம்.

அஜ்மான், அபுதாபி, துபாய், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் புஜைரா என ஒவ்வொரு எமிரேட்டும் தனித்தனியாக இருந்த காலத்தில் பல்வேறு வகையான நாணயங்கள் பழக்கத்தில் இருந்தன. அதாவது 1960 களின் பிற்பகுதியில் கத்தார் ரியால், துபாய் ரியால் ஆகியவை இங்குள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. அபுதாபியைப் பொறுத்தவரையில் பஹ்ரைன் தினார் உபயோகிக்கப்பட்டது.

dubai riyal
Image Credit: Emirates 24/7

எமிரேட்கள் ஒன்றிணைந்து அமீரகம் என்னும் நாடு பிறந்தவுடன், மொத்த நாட்டிற்குள்ளும் பயன்படுத்தக்கூடிய பொதுவான நாணயத்தின் தேவை எழுந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகள், விவாதங்களுக்குப் பிறகு 1973 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி “திர்ஹம்ஸ்” அதிகாரப்பூர்வ அமீரகத்தின் பணமானது.

பண விநியோக மற்றும் பொருளாதார சமாச்சாரங்களைக் கவனிக்க அதே ஆண்டு (1973) நாணய வாரியம் (Currency Board) அமைக்கப்பட்டது. பின்னர் 1980 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமீரக மத்திய வங்கி (UAE Central Bank) இந்த பொறுப்புகளைக் கவனிக்கத் துவங்கியது.

வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட திர்ஹம்ஸ்

இந்தக் கட்டுரையின் முதல் பாராவில் நீங்கள் படித்ததைப் போல, அமீரகத்தின் திர்ஹம்ஸ் ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom), பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்த அச்சடிக்கும் நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டு அமீரகத்திற்கு வந்துகொண்டிருந்தது. அமீரக நாணயங்கள் கனடாவின் வின்னிபெக் நகரத்தில் உள்ள ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனத்தில் அச்சடிக்கப்பட்டன. இதெல்லாம் 2017 வரைதான்.

Dirhams uae
Image Credit: Gulf News

அமீரகத்தின் முதல் பணம் அச்சடிக்கும் மையம் 2017 மார்ச் மாதம் அபுதாபியில் துவங்கப்பட்டது. கலீஃபா இண்டஸ்ட்ரியல் ஸோன் ஆஃப் அபுதாபி (Khalifa Industrial Zone of Abu Dhabi) யில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமத்திற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த நிறுவனத்தைத் துவங்கி வைத்தார். இங்கு அச்சடிக்கப்பட்ட முதல் 1000 திர்ஹம்ஸ் நோட்டானது, துபாய் ஆட்சியாளருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

இந்த மையத்தில் பணம் அச்சடித்தல், பாதுகாப்பு முறைமைகளை தீர்மானித்தல் போன்றவைகளை ஒமொலாத் செக்யூரிட்டி பிரிண்டிங் (Oumolat Security Printing) நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. அரேபிய மொழியில் Oumolat என்றால் நாணயம் (Currency) என அர்த்தமாம்.

sheikh mohammed
Image Credit: The National

பணத் தாள்களில் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துவதில் உலகளவில் சிறந்து விளங்கும் இந்த நிறுவனம் பல மத்திய வங்கிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

DIRHAMS
1.2K Shares
Share via
Copy link
Powered by Social Snap