UAE Tamil Web

கணவர் மொபைலை வேவு பார்த்த மனைவிக்கு வேட்டு வைத்த நீதிமன்றம்..!

ராஸ் அல் கைமாவில் உள்ள நீதிமன்றத்தில் விநோதமான வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் தனது 2வது மனைவி தன்னுடைய மொபைல் போனை அனுமதியின்றி பயன்படுத்தி வேவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தனது முதல் மனைவி உடனான உரையாடலை படித்து அதை தனது மகளிடம் பகிர்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட கணவன் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2வது மனைவியின் செயல்பாடுகளால் முதல் மனைவியுடன் பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனை சரி செய்ய பல முறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு வேலையை இழந்து நிற்பதாகவும் பாதிக்கப்பட்ட கணவர் வேதனை தெரிவித்தார். இந்த பிரச்னையின் எதிரொலியால் முதல் மனையுடன் விவாகரத்தாகிவிட்டதாகவும், கடும் மன உளைச்சலுக்கு ஆளானதால் மொபைல் போனை வேவு பார்த்த தனது 2வது மனைவியிடம் இருந்து 25,000 திர்ஹம் இழப்பீடு பெற்றுத் தருமாறும் பாதிக்கப்பட்ட அந்த கணவர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

தவறை ஒப்புக்கொண்ட 2வது மனைவி தரப்பு, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தனது கணவரிடம் இருந்து மாதம் 3,000 திர்ஹம்ஸ் ஜீவனாம்சம் பெற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தது. இரு தரப்பையும் விசாரித்த நீதிமன்றம், மொபைல் போன் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் 2வது மனைவியே உண்மையை ஒப்புக்கொண்டதால் அவருக்கு  8,100 திர்ஹம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. கணவரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட செலவான 2,100 திர்ஹம்ஸையும் அவரிடம் திருப்பித் தர வேண்டும் எனவும் 2வது மனைவிக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் 2வது மனைவியிடம் இருந்து பாதிக்கப்பட்டவர் கோரியிருந்த பெரிய அளவிலான இழப்பீட்டு தொகையை ஏற்க முடியாது என நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னதாக இதேபோன்றதொரு மற்றொரு வழக்கில் கணவரின் மொபைல் போனை ஒட்டுக்கேட்ட மனைவிக்கு 1 மாதம் வரை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் இந்திய அரசியலில் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கு அதை விட மேலாக குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அதிர்வலைகள் வியக்க வைக்கிறது!

3 Shares
Share via
Copy link