UAE Tamil Web

அமீரகத்தில் இன்று மழையை எதிர்பார்க்கலாம் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

rain uae

அமீரகத்தின் கிழக்குத் திசையில் உள்ள மலைப்பகுதிகளில் இன்று லேசான மற்றும் பரவலான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வுமைய (NCM) அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

நேற்று அமீரகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதுகுறித்துப் பேசிய NCM ஐச் சேர்ந்த டாக்டர் அகமது ஹபீப் (Ahmed Habib),” அமீரகத்தில் கோடைகாலம் முடிந்து குளிர்காலம் துவங்கி இருக்கிறது. இவை பருவகால மழையாகும். வருடத்தின் இந்தக் காலகட்டத்தில் அமீரகம் மழையைப் பெறும். செவ்வாய்க்கிழமை முதல் வானிலை சீராகும். காலை நேரங்களில் பனிமூட்டம் இருக்கும்” என்றார்.

நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 32- 35C ஆக இருக்கும் எனவும், கடலோரப்பகுதிகளில் 30 – 33C இருக்கும் எனவும் மலைப்பகுதிகளில் 27 – 31C இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மற்றும் நாளை காலை பனிமூட்டம் ஏற்படும், ஈரப்பதம் மிகுந்து காணப்படும் என அகமது குறிப்பிட்டார். உட்பகுதிகளில் 55 – 75 வரையிலும் கடலோரப்பகுதிகளில் 60 – 85 ஆகவும் மலைப்பகுதிகளில் 40 – 60 ஆகவும் ஈரப்பதம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு நோக்கி காற்றானது மணிக்கு 20 – 30 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றமாக இருக்கும் எனவும் எதிர்வரும் காலங்களில் கடல் சீற்றமில்லாமல் காணப்படும் எனவும் அகமது தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.