உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான துபாயில் அமைந்துள்ள மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் விமான பணிப்பெண் வேடமணிந்து பதாகையுடன் ஒருவர் நின்று கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமீரகத்திற்குள் நுழைய விமான போக்குவரத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் புதிய விளம்பரம் ஒன்றை எடுக்க திட்டமிட்டது. 828 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபாவில் தங்கள் விமான சேவை குறித்து விளம்பரத்தை படம்பிடிக்க எமிரேட்ஸ் முடிவு செய்தது.
இதற்காக பிரபல ஸ்கை டைவரான நிகோலே ஸ்மித் லுட்விட் என்ற பெண் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விமானப் பணிப்பெண் போல வேடம் அணியச் செய்து அவரது கைகளில் விளம்பர பதாகைகளை வழங்கி பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அட்டகாசமான விளம்பரத்தை எடுத்து அசத்தியிருக்கிறது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் விமான பணிப்பெண் உச்சியில் நிற்பது போன்ற 30 விநாடிகள் ஓடும் இந்த விளம்பரத்தை எமிரேட்ஸ் வெளியிட்ட உடன் இணையத்தில் படு வேகமாக வைரல் ஆகியது. நெட்டிசன்களின் வேண்டுகோளுக்கிணங்க விளம்பர படப்பிடிப்பு காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வாழ்நாளில் இதுபோன்றதொரு சிறந்த விளம்பர படப்பிடிப்பில் தான் நடித்ததில்லை என அதனை வெற்றிகரமாக செய்து முடித்த நிகோலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
