துபாய் கிரிமினல் நீதிமன்றம், தனக்கு பிறந்த மகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு சொந்த நாட்டுக்கு தப்பிச் சென்ற ஆசிய பெண் ஒருவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் உள்ள மருத்துவமனையை மேற்கோள்காட்டி பேசிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்றும். குறைமாத குழந்தையாக பிறந்ததால் அந்த சிசு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்த குழந்தை மோசமான உடல் நிலையில் இருந்தபோது பச்சிளம் சிசுவை விட்டுவிட்டு அந்த பெண் இரக்கமின்றி அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். அந்த தாய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார்.
ஆனால் அப்போதும் தனது குழந்தையை அழைத்துச் செல்லாமல் தனியே வெளியேறினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. மகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதால், தாயை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
அதன் பிறகு தான் அந்த பெண்மணி நாட்டை விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது, இந்நிலையில் அந்த ஆசிய பெண்மணி தற்போது கைது செய்யப்பட்டு அவருக்கு 2 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்மணி எந்த ஆசிய நாட்டை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்களை நீதிமன்றம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.