UAE Tamil Web

அமீரகம்: சினோபார்ம் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் பைசர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அரசு அனுமதி..!

Pfizer

அபுதாபி: சென்ற ஆண்டு துவங்கப்பட்ட தடுப்பூசித் திட்டத்தின் அடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸாக பைசர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அபுதாபி அரசு அனுமதியளித்துள்ளது.

முன்பு போடப்பட்ட தடுப்பூசி இல்லாமல் வேறுவகை தடுப்பூசியை போட்டுக்கொள்ள அனுமதியளிப்பது அபுதாபியில் இதுவே முதல்முறையாகும். முபதலா மருத்துவ தடுப்பூசி மையங்களில் இந்த பூஸ்டர் தடுப்பூசியைப் பெறலாம்.

இம்மைய பிரதிநிதி ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில்,” இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 மாதங்கள் கழித்து பைசர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

இந்தத் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்பதிவு மற்றும் மருத்துவரிடம் ஒப்புதல் பெற்ற படிவம் ஆகியவை முக்கியம் என முபதலா தடுப்பூசி மையத்தின் கால் செண்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த தடுப்பூசி மையத்தில் இரண்டு படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதில் ஒன்றை நீங்களும் மற்றொன்றை மருத்துவரும் பூர்த்திசெய்ய வேண்டும். “முன்னர் போட்டுக்கொண்ட தடுப்பூசி வகையை விட மற்றொன்றை எடுத்துக்கொள்ள சம்மதம்” என அந்தப் படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுடைய அடிப்படைத் தகவல்களை நீங்கள் படிவத்தில் நிரப்பவேண்டும். இரண்டாவது படிவத்தை எடுத்துக்கொண்டு ஒரு பொது மருத்துவரை சந்திக்கவேண்டும். உங்களுடைய உடல்நிலை குறித்து அறிந்த பின்னர், பைசர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மருத்துவர் உங்களிடம் விளக்குவார். அதேநேரத்தில் நீங்கள் முன்னர் எடுத்துக்கொண்ட தடுப்பூசிகளின் தேதிகளையும் மருத்துவர் சரிபார்த்து அதன்பின்னர் படிவத்தில் கையெழுத்திடுவார்.

பைசர் தடுப்பூசி எடுத்துகொள்ள வருகையில் படிவங்களை நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டும். தடுப்பூசிக்காக முன்பதிவு செய்ய 8004959 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம். அல்லது MCV@telemed.ae க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.