UAE Tamil Web

அமீரகத்தில் வேலை கிடைத்தால் முதலில் இதைச் செய்யுங்கள் : அமீரகத்தில் வேலை தேடுவோரை எச்சரிக்கும் துணைத் தூதரகம்..!

Indian-Consulate-in-Dubai

அமீரகத்தில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றும் ஏஜெண்ட்கள் ஒருபுறம் என்றால், போலியான இணையதள முகவரிகள் மூலமாக அமீரகத்தின் பிரபல நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும் பணியில் இறங்கி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடும் கும்பல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கவே பிரவசி பாரதிய சஹாயாத கேந்த்ரா (PBSK) என்னும் அப்ளிகேஷனை துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் சமீபத்தில் இந்தியர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட பணி நியமன ஆணையை போலியானது என துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அவர் துணைத் தூதரகத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஷோயப் என்பவருக்கு துபாய் டிபி வேர்ல்ட் நிறுவனத்தில் அலுவலக பணியாளராக வேலை கிடைத்துள்ளதாகவும் மாதம் 3,470 திர்ஹம்ஸ் ஊதியம் தரப்படும் எனவும் இதுபோக தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இலவசம் என இணையம் வழியாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் அதிகாரப்பூர்வ QR code ஒன்றும் இருந்திருக்கிறது.

இதனையடுத்து துணைத் தூதரகத்தின் கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்றிருக்கிறார் ஷோயப். கடிதத்தை ஆய்வு செய்த துணைத் தூதரக அதிகாரிகள், அது போலியானது எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, செய்தி கலாச்சாரம் மற்றும் கல்வித்துறை அதிகாரியான சித்தார்த்தா குமார் பிரெயிலி,” வேலை தேடுபவர்கள் தங்களது பணி நியமன ஆணையை PBSK அப்ளிகேஷனில் PDF வடிவில் உள்ளீடு செய்யவேண்டும்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் தலைமைத் துணைத் தூதரக அதிகாரியான டாக்டர்.அமன் பூரி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அப்ளிகேஷன் மூலமாக நாள்தோறும் 100 போன்கால்களும் 25 மின்னஞ்சல்கள் வருவதாக அவர் தெரிவித்தார்.

நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களின் துயர்துடைக்க இயங்கிவரும் இந்த மையமானது கடந்த நவம்பர் 1 ஆம் தேதி JLT யிலிருந்து துணைத் தூதரக வளாகத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Indian-Consulate-in-Dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap