UAE Tamil Web

அபுதாபியில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் நிதியளித்த லூலூ குழும தலைவர் யூசப் அலி..!

Lulu-

அபுதாபியின் அல் முரேகா பகுதியில் 4.37 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தேவாலயம் ஒன்றினை CSI Parish அமைப்பு கட்டிவருகிறது. இதற்கான அனுமதியை அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வழங்கியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சகிப்புத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த வாழ்வியலுக்கான அமீரக அமைச்சர் ஷேக் நஹ்யான் பின்ட் முபாரக் அல் நஹ்யான் இந்த தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். இந்நிலையில் லூலூ குழுமத்தின் தலைவர் யூசப் அலி இந்த தேவாலயத்திற்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் நிதியதவி அளித்திருக்கிறார்.

CSI Parish அமைப்பின் பொறுப்பாளர் லால்ஜி எம்.பிலிப் (Lalji M. Philip) அவர்களிடத்தில் 5 லட்சம் திர்ஹம்சிற்கான காசோலையை யூசப் அலி வழங்கினார். அபுதாபியில் நடந்த இந்த நிகழ்வில் முன்னாள் பொறுப்பாளர் மலயில் சாபு கோஷி செரியன் (Malayil Sabu Koshy Cherian) காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.

இதுகுறித்துப் பேசிய அருட்தந்தை லால்ஜி,” அமீரக ஆட்சியாளர்களின் தயாள குணத்தினால் உலக அரங்கில் அமீரகம் மிகவும் சகிப்புத்தன்மையுள்ள நாடாக அறியப்படுகிறது. எங்களது அனைத்து நடவடிக்கைகளுக்கும் எப்போதும் உதவும் யூசப் அலிக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

யூசப் அலி இந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,” அமீரகம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு தாயகமாக விளங்குகிறது. இதில் வெவ்வேறு மத மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்களும் அடங்குவர். மறைந்த அமீரகத்தின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுடைய கனவான நல்லிணக்கமும் அமைதியான வாழ்வும் நிறைந்த நாடாக அமீரகம் திகழ்கிறது. இன்றைய ஆட்சியாளர்களும் அதற்காக பாடுபடுகிறார்கள். இத்தகைய முயற்சியில் என்னுடைய சிறு பங்கும் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இந்தாண்டு இறுதிக்குள் இந்த தேவாலயம் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 750 பேர் கூடலாம் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

Lulu-
424 Shares
Share via
Copy link
Powered by Social Snap