UAE Tamil Web

அபுதாபியில் கிடைக்கும் நம்ம ஊர் சாப்பாடு : அமீரக வாழ் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த ஹோட்டல்..!

எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா? ஆகாதுதான். ஆனால் எல்லா ஊரிலும் இப்போது நம்முடைய தமிழ்நாட்டு பிரத்யேக உணவு வகைகள் கிடைக்கின்றன. மற்ற நாடுகளில் எப்படியோ.. அமீரகத்தில் தாராளமாகவே கிடைக்கிறது. அதுவும் அபுதாபியில் உள்ள சைதூண் ஹோட்டல் இங்குள்ள பல தமிழர்களின் நாக்குகளை அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

2005 ஆம் ஆண்டு செட்டிநாடு ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த உணவகம் தான் தற்போது சைதூண் ரெஸ்டாரண்ட் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

அபுதாபியில் தமிழ்நாட்டு உணவு: நிறையவே கடைகள் இருக்கிறது. வேறென்ன பிரமாதமாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்துடன் தான் உள்ளேயே நுழைந்தோம். புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலின் அழகுடன் போடப்பட்டிருந்த டேபிள்கள், இதமான மென் மணம் சாப்பாட்டிற்கான நேரத்தை மேலும் அழகாக்கியது. மல்டி குசைன் ஹோட்டல் என்பதால் பல்வேறு வகையான உணவுகளின் கண்கவர் புகைப்படங்கள்  மெனு கார்டில் அதே அழகுடன் இடம்பெற்றிருந்தன. ஆனால் நம் புத்தி (அல்லது என் புத்தி) முதலில் நம்ம ஊர் ஐட்டங்களைத் தான் தேடியது.

சிரித்த முகத்துடன் ஆர்டர் கேட்க வந்த நபரிடம் என்ன இருக்கிறது? என சம்ப்ரதாயமாக ஒரு கேள்வியை வைக்க, அதே புன்னகை மாறாமல் சொல்லத் துவங்கினார் அவர். இடைமறித்து பட்சணங்களின் பட்டியலை அவரிடம் அளித்துவிட்டு ஹோட்டலைப் பார்த்தேன். நெரிசல் இல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக நேரம் செலவிடவும், நம் ஊர் உணவுகளை வயிற்றுக்குள் செலுத்தவும் நல்ல இடம்.

ஆர்டர் செய்த பிரியாணிக்காக காத்திருப்பது காதலுக்காக காத்திருப்பது போன்றது. அப்படியான உணர்சிக் கொந்தளிப்பில் இருந்த எங்களை ரொம்ப நேரம் இந்த ஹோட்டலின் ஊழியர்கள் காக்க வைக்கவில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் கச்சிதமாக டேபிளில் உணவுகளை அடுக்கினர் பணியாளர்கள்.

சீரக சம்பாவில் வடித்த பிரியாணியும் உவமையே சொல்ல முடியாத தாளிச்சாவையும் முதல் வாய் எடுத்து வைத்த உடனேயே தெரிந்துவிட்டது “உள்ளே இருப்பது நம்ம ஊர் ஆள் தான் ” என்று. பிரியாணியில் இருந்து அப்படியே வஞ்சிர மீன் வறுவலுக்கு வருகையில் சைவம் தான் சாப்பிடுவேன் என சத்தியம் செய்துவிட்டு வந்திருந்த நண்பரின் முன்னால் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் என ஒரு படையே பிளேட்டில் வந்திறங்கியது.

என்ன இருந்தாலும் கூட்டு, பொரியலை மறக்கக் கூடாது என அதையும் ஒரு கை பார்த்தேன். அசைவம் மட்டுமல்ல சைவத்திலும் எங்களிடம் கில்லாடிகள் இருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த பாயாசம். சமையல் செய்த கைகளைக் குலுக்கிவிட்டு வரவேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டேன்.

தமிழகத்தைச் சேர்ந்த குடும்பங்களின் வருகை அதிகமிருப்பதை பேச்சொலிகள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. இதுமட்டுமல்லாமல் அபுதாபி முழுவதும் இலவசமாக உணவு டெலிவரியும் உண்டு என்பதால், அதற்கும் பணியாளர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரிந்துகொண்டிருந்தனர். இதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தார் நண்பர்.

நம்மூரில் ஞாயிற்றுக்கிழமை கறி எடுத்து அம்மா சமைத்து, சாப்பிட்ட பின்னர் வரும் குட்டித்தூக்கத்திற்கு முன்பாக ஒரு திருப்தி இருக்குமல்லவா? அது எங்களுக்குக் கிடைத்தது.

சரி, வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிட்டுவிட்டோம். பர்ஸ்க்கு பஞ்சம் பிடிக்குமோ என்ற கலக்கத்துடன் பில்லை கையில் வாங்கினேன். அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட குறைவாக பில் அமவுண்ட் இருந்ததைப் பார்த்து.

மத்தியானம் இதுவென்றால், காலை சிற்றுண்டிக்கு இட்லி, வடை, பொங்கல், தோசை என மிரட்டி எடுக்கிறது சைதூண் ஹோட்டல். பொங்கலையும் வடையையும் வேட்டையாட அடுத்தமுறை காலையில் வரவேண்டும் என்றபடி நண்பரும் நானும் வெளியே வந்தோம்.

ஹோட்டலின் மேல்தளத்தில் சிறிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் ருசி, விலை என இரண்டிலும் நம்மைத் திருப்திப்படுத்தும் ஹோட்டல் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சைதூண் ஹோட்டலைக் கைகாட்டிவிடலாம்.

16 ஆண்டுகளாக உணவுத்துறையில் தன்னிகரற்று விளங்கிவரும் உணவகம் என்பதை அதன் சேவையில், உணவின் தரத்திலும் எளிதில் நமக்குக் காட்டிவிடுகிறது சைதூண்.

ஹோட்டலில் பரிமாறப்படும் உணவுவகைகளின் மெனு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சைதூண் ஹோட்டலின் அழகிய புகைப்படங்கள்

உணவு வகைகள்

அமைவிடம் (Location)

0 Shares
Share via
Copy link