புர்ஜ் கலீஃபா.! கட்டிடங்களுக்கெல்லாம் ஹீரோ. ஆம்.! தான் நிகழ்த்தும் ஒவ்வொரு அற்புதங்களிலும் தான் ஒரு வல்லரசு என்பதை உலகிற்கு நிரூபிக்க தவறியதில்லை அமீரகம். அதற்கு வானோங்கிய எடுத்துக்காட்டாக திகழ்வது புர்ஜ் கலீஃபா. “உலகின் மிக உயர்ந்த கட்டிடம்” என்ற கின்னஸ் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் இன்னும் பல சாதனைகளை முறியடித்துள்ளது. அதன் உயர்ந்த அம்சங்கள் சிலவற்றை காணலாம்.
1. உலகை அண்ணார்ந்து பார்க்க வைத்த புர்ஜ் கலீஃபா என்னும் சாதனையின் உயரம் 828 மீட்டர் (2716.5 அடி) உயரம் கொண்டது. அதாவது இது ஈஃபிள் கோபுரத்தை விட மூன்று மடங்கு உயரமும், எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட இரு மடங்கு உயரமும் கொண்டது. கீழிருந்து பார்க்கும் போது மேகத்தை துளைத்து கொண்டு போகும் புர்ஜ் கலீஃபாவின் அழகு வானத்தை தொடுவது போன்ற காட்சியளிக்கிறது.
இவ்வளவு பிரம்மாண்ட உயரம் நிச்சயமாக புர்ஜ் கலீஃபாவைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்றாகும்.
2. கட்டிடக்கலையின் அரசனான புர்ஜ் கலீஃபா தனக்கென்ன கின்னஸ் புத்தகத்தில் ஒரு தனி வரிசை வைத்துள்ளது. இதோ அந்த பட்டியல்.
- உலகின் மிக உயர்ந்த கட்டிடம்
- உலகின் மிக உயரமான ஃப்ரீஸ்டாண்டிங் கட்டமைப்பு
- உலகிலேயே அதிக தளங்களை கொண்டுள்ள கட்டிடம்
- உலகிலேயே அதிக தளங்கள் நிரம்பப்பட்ட கட்டிடம்
- உலகில் மிக உயர்ந்த வெளிப்புற கண்காணிப்பு தளத்தைக் கொண்டுள்ள கட்டிடம்
- உலகிலேயே மிக நீண்ட பயண தூரத்தைக் கொண்ட லிஃப்ட் உள்ள கட்டிடம்
- உலகிலேயே மிக உயரமான லிப்ட் சேவையை கொண்ட கட்டிடம்
இத்தனை சாதனைகளை படைத்து கம்பீரமாக நிற்கும் புர்ஜ் கலீபா எந்த விதத்திலும் தன்னை காண வரும் மக்களை ஒருபோதும் கவர தவறியதில்லை.
3. புர்ஜ் கலீஃபாவின் சுவாரஸ்யங்களில் மனதில் பதிய வைக்கும் முக்கியமான ஒன்று, கட்டிடம் உருவாகியுள்ள பொருட்கள் எவ்வளவு எடை கொண்டவை என்பதுதான். கற்பனைக்கு கூட எட்டாத வண்ணம் புர்ஜ் கலீஃபாவின் கான்கிரீட்டின் எடை 100,000 யானைகளுக்கு சமமானதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் புர்ஜ் கலீஃபாவில் பயன்படுத்தப்பட்ட அலுமினியத்தின் மொத்த எடை ஐந்து A-380 விமானங்களுக்கு சமம். இவ்வளவு எடையையும் தன்னுள் அடக்கி ஓங்கி நிற்கும் புர்ஜ் கலீஃபா கண்டிப்பாக சிம்மாசனத்தில் இருக்கும் அரசன் தான்.
4. உலக மக்கள் உண்மையிலேயே பாராட்டக்கூடிய புர்ஜ் கலீஃபாவின் அற்புதங்களில் மற்றொன்று அதன் நிலைத்தன்மை மற்றும் வளங்களை மறுபயன்பாடு செய்தல் ஆகும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் கேலன் (56781 லிட்டர்) தண்ணீர் நிலையான முறையில் சேகரிக்கப்படுகிறது. நிலப்பரப்பு மற்றும் தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும், குளிரூட்டும் முறைக்கும், துபாய் ஃபவுன்டைன் வழங்குவதற்கும் இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.
5. புர்ஜ் கலீபாவின் மறுக்கமுடியாத அடுத்த அற்புதம் அதன் லிஃப்ட் ஆகும். நாம் சிறுவயதில் நினைத்திருப்போம். சர்ரென்று நிமிடத்தில் மேலே போக வேண்டும் என்று. ஆனால் அது சாத்தியமாகும் என்று அன்று நாம் யோசித்திருக்க மாட்டோம். புர்ஜ் கலீஃபாவில் உள்ள 140 மாடிகள் செல்லக்கூடிய நீளமான லிஃப்ட் தான் உலகிலேயே மிக நீண்ட பயண தூரத்தைக் கொண்ட லிஃப்ட் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதன் வேகம் வினாடிக்கு 10 மீட்டர் தூரம் செல்லக்கூடியதாகும். 124 வது மாடியில் உள்ள கண்காணிப்பு தளத்தை அடைய புர்ஜ் கலீஃபாவின் லிஃப்ட் எடுக்கும் நேரம் ஒரு நிமிடம் மட்டுமே.
6. புர்ஜ் கலீஃபாவைப் பற்றி அதிகம் அறியப்படாத சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், புர்ஜ் கலீஃபாவின் மேல் நுனியை 95 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட காணலாம். இது மிகவும் அசாதாரணமான விஷயம் ஆகும்.
7. மிகவும் அறியப்பட்ட புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் பிரமாண்ட தகவல் என்னவென்றால், கட்டுமானத்தின் உச்சத்தில், ஒரு நாளைக்கு 12,000 தொழிலாளர்கள் கட்டிடத்தில் வேலை செய்துள்ளனர். இது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
8. நிச்சயமாக, புர்ஜ் கலீஃபா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளைப் பற்றி பேசும்போது இதனை உருவாக்க எவ்வளவு நேரங்கள் ஆனது என்பதை விட்டுவிட முடியாது. புர்ஜ் கலீஃபாவை முடிக்க 22 மில்லியன் மனித-மணிநேரம் தேவைப்பட்டது.
9. புர்ஜ் கலீபாவை கட்டுவதற்கான அகழ்வாராய்ச்சி ஜனவரி 2004 ல் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, புர்ஜ் கலீஃபா இறுதியாக ஜனவரி 2010 ல் திறக்கப்பட்டது.
10. புர்ஜ் கலீஃபாவின் சுவாரஸ்யமான மற்றொரு உண்மை என்னவென்றால், இது ஹைமனோகல்லிஸ் பூவை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
