அமீரகத்தை பாலைவன பூமி என நினைத்தவர்களுக்கு ஒரு அற்புத விருந்தாக கண்டவுடன் காதல் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது தான் துபாய் மிராக்கிள் கார்டன். அனைத்து துறையிலும் எவ்வகையிலும் தான் ஒரு வளர்ந்த நாடு என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது அமீரகம். அதற்கு மற்றுமொரு வண்ணமிகு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த துபாய் மிராக்கிள் கார்டன். அப்படிப்பட்ட அழகிய பூந்தோட்டம் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முன்னோட்டத்தை அளிக்க இருக்கிறது இந்தத் தொகுப்பு.
இதன் சிறப்பு என்ன?
துபாய் தாவரவியல் வாழ்விடத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால் இந்த தோட்டம் எளிதாக உருவாகவில்லை. பார்வையாளர்களை கவர துபாய் அரசு பெரும் முயற்சியை செய்து இந்த வெற்றியை படைத்துள்ளது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த தோட்டக்கலை வல்லுநர்கள் அடங்கிய குழு இதனை பக்குவமாக பராமரித்து வருகிறார்கள். மேலும் வண்ணமயமான பூக்களால் நெய்யப்பட்ட புர்ஜ் கலீஃபாவின் நகல், கல்லறைகள், குடிசைகள், வீடுகள் மற்றும் பிற கட்டமைப்பு கண்காட்சிகள் துபாய் மிராக்கிள் கார்டனிற்கு அழகு சேர்க்கின்றன.
50 மில்லியன் பூக்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கவர்ச்சிகரமான துபாய் மிராக்கிள் கார்டனை பற்றி கூடுதல் தகவல்களை காண தயாரா.? சரி வாருங்கள்.!
1. மலர் அணிவகுப்பு:
துபாய் மிராக்கிள் கார்டன் மலர் அணிவகுப்பு இந்த அற்புதமான தோட்டத்தின் சிறப்பம்சமாகும். மலர் மிதவைகள், வண்ணமயமான ஆடைகள் அணிந்து நடிக்கும் கலைஞர்கள், நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்றியவை இந்த மலர் அணிவகுப்பின் ஒரு பகுதியாகும்.
2. அனைவரையும் கவரும் கிட்ஸ் ப்ளே:
சிறுவர்களை உடன் அழைத்து செல்கிறீர்களா? கவலை வேண்டாம்.! அவர்களை ஈர்க்கவும் பல விளையாட்டுக்கள் மற்றும் அற்புதமான இடங்கள் துபாய் மிராக்கிள் கார்டனில் உள்ளன. இவை சிறியவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் தன்வசம் கொண்டுவர வல்லது. இந்த விளையாட்டுப் பகுதிகள் ஒவ்வொன்றும் வண்ணமயமான மற்றும் மணம் கொண்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பெற்றோருடன் சேர்ந்து தோட்டத்தை ஆராய விரும்பும் குழந்தைகளை விட விளையாட விரும்பும் குழந்தைகளுக்கு இது சிறந்த இடமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
3. குடும்பத்திற்கான ஜூம்பா அமர்வுகள்:
ஜூம்பா எனப்படுவது நடனமுடன் சேர்ந்து செய்யும் ஒருவகை உடற்பயிற்சி ஆகும். கார்டனின் மலர் பாதைகளில் நிதானமாக நீண்ட தூரம் நடப்பது மட்டுமல்லாமல், முழு குடும்பமும் அனுபவிக்கக்கூடிய ஒரு உடற்பயிற்சியையும் கொண்டுவந்துள்ளது துபாய் மிராக்கிள் கார்டன் நிர்வாகம்.
ஆம்.! ஒவ்வொரு பருவத்திலும் இந்த கார்டனில் குடும்பத்துடன் ஈடுபடக்கூடிய ஜூம்பா அமர்வுகள் போன்ற சுகாதார முயற்சிகளில் துபாய் மிராக்கிள் கார்டன் ஈடுபடுவதில் பார்வையாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஒவ்வொரு அமர்வுகளுக்கு இடையில் ஆழ்ந்த மூச்சை எடுத்து பூக்களின் நறுமணத்தை உள்ளிழுக்கும் சுகமே தனி என்கிறார்கள் சுற்றுலாவாசிகள்.
4. யோகா செய்யலாம் வாங்க:
என்னதான் புதுப் புது உடற்பயிற்சிகள் வந்தாலும் காலங்காலமாக திகழ்ந்து விளங்கும் யோகாவை மறக்கவில்லை துபாய் மிராக்கிள் கார்டன். இங்கே நிகழ்த்தப்படும் யோகா அமர்வுகள் அனைத்து வயதினருக்கும் உடல் திறன்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே யோகாவும் இயற்கை சூழலும் ஒன்றிணைந்ததாகவே கருதப்படுகின்றது. அதற்கு ஏற்றவாறு ஆழ்ந்த சுவாச யோகா அமர்வுகளுக்கான மணம் நிறைந்த மலர் வாசனை காற்றில் வீசக்கூடிய சிறந்த இடங்களில் இந்த தோட்டம் ஒன்றாக விளங்குகிறது.
5. அழகிய க்ளிக்:
துபாய் மிராக்கிள் கார்டனில் அனைவரும் பயன்படுத்தும் வண்ண புகைப்பட சாவடிகள் உள்ளன. இது உங்கள் மகிழ்ச்சியான நினைவுகளை வண்ணமயமான படமாக எடுத்துச் செல்ல நல்ல ஒரு இடமாக கருதப்படுகிறது. உங்கள் புகைப்படங்களுக்கு சில வேடிக்கைகளையும் உற்சாகத்தையும் சேர்க்க தனிப்பயனாக்கப்பட்ட பிரேம்கள் மற்றும் கட்-அவுட்களும் பார்வையாளர்கள் உபயோகத்திற்கு இருக்கின்றது.
6. யம்மி யம்மி கடைகள்:
உங்கள் நாவின் சுவை அரும்புகளுக்கு ருசி சேர்ப்பதற்காக துபாய் மிராக்கிள் கார்டனில் 30க்கும் மேற்பட்ட பல்வேறு உணவகங்கள், கஃபேக்கள், இனிப்பு மற்றும் மிட்டாய் கடைகள் உள்ளன. அவை அனைத்தும் சிறியவர்களை கவர்வதை காட்டிலும் பெரியவர்களை சுண்டி இழுக்கின்றன. இதில் புதிதாக பழச்சாறு கியோஸ்க்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் நில்லாமல் துபாய் மிராக்கிள் கார்டனிற்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்காக மேலும் பல வியப்பூட்டும் ஈர்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நீர்வீழ்ச்சியை போன்ற தலை முடியுடன் காற்றில் மிதக்கும் பெண் சிலை, அனைவரையும் தன் வசம் இழுக்கும் (முக்கியமாக இளம் பெண்களை) டெட்டி பேர் உருவம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரகாசமான சூரியகாந்தி பூக்களினால் செய்யப்பட்ட சூரியகாந்தி மலரிடம், வண்ணமயமான ஹில் டாப், 3D மலர் கட்டமைப்புகளுடன் கூடிய தெள்ளத்தெளிவான லேக் பார்க், தனித்துவமான குடை சுரங்கம், இதய வடிவிலான சுரங்கம், மலர் கோட்டை, என்றென்றும் அனைவருக்கும் பிடித்தமான டிஸ்னி உருவங்கள், மலர் கடிகாரம் மற்றும் 5,00,000 மலர்களினால் உருவாக்கப்பட்ட எமிரேட்ஸ் A380 விமானம் என்று வரிசை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இத்தனை அழகை தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் துபாய் மிராக்கிள் கார்டன் கண்டிப்பாக அனைவருடைய அமீரக சுற்றுலா பட்டியலிலும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடம்: அல் பார்ஷா தெற்கு 3, துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.
திறந்திருக்கும் நேரம்: துபாய் மிராக்கிள் கார்டன் நவம்பர் முதல் மே நடுப்பகுதி வரை குளிர்காலத்தில் மட்டுமே செயல்படும்.
வார நாட்கள் (ஞாயிறு முதல் வியாழன் வரை) – காலை 09:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை.
வார இறுதி நாட்கள் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) – காலை 09:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.
டிக்கெட் விலை: மிராக்கிள் கார்டனுக்கான டிக்கெட்டுகளின் விலைகள் வெவ்வேறு வயதினருக்கு மாறுபடும்:
பெரியவர்களுக்கு (12 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள்) – 50 AED
குழந்தைகளுக்கு (2 முதல் 12 வயது வரை) – 40 AED
உங்களுக்கு சில டிப்ஸ்:
- துபாய் மிராக்கிள் கார்டனின் தொடக்க மற்றும் இறுதி நேரங்கள் இரண்டையும் கண்காணிப்பது பரிந்துரைக்கப்படுகின்றது. அவற்றின் செயல்பாட்டு நாட்கள் மற்றும் நேரங்களை சரிபார்க்க, துபாய் மிராக்கிள் கார்டனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவது நல்லது.
- அதிகாலை நேரம் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் துபாய் மிராக்கிள் கார்டனுக்கு அதிகாலை வருகை எப்போதும் சிறந்தது. துபாய் மிராக்கிள் கார்டனில் சில அற்புதமான தருணங்களைப் படம் பிடிக்க இது உங்களுக்கு போதுமான நேரத்தையும் இடத்தையும் கண்டிப்பாக வழங்கும்.
- 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்ட்ரோலர்களை (Stroller) கார்டனுள் எடுத்துச் செல்ல உங்களுக்கு அனுமதி உண்டு.
- உங்கள் சுற்றுப்பயணத்தை சரியாக திட்டமிட முடிந்தால், துபாய் மிராக்கிள் கார்டனுக்கான உங்கள் பயணத்தை முடிக்க சுமார் 3 மணி நேரம் ஆகும்.
