பாம் ஜுமைராவில் அமைந்துள்ள, 5 நட்சத்திர ஹோட்டலான இந்த அட்லாண்டிஸ் தான் துபாயின் தீவில் கட்டப்பட்ட முதல் ஹோட்டல் என்னும் பெருமைக்குரியது. கடலுக்கடியே புதைந்த நகரம் என்னும் அட்லாண்டிஸின் கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்டது தான் துபாய் அட்லாண்டிஸ். ஆனால் இந்த அட்லாண்டிஸ்-ன் வடிவமைப்பு மற்றும் அலங்காரம் முற்றிலும் அரேபிய வழியிலானதாகும்.
இந்த நட்சத்திர அட்லாண்டிஸ் ஹோட்டலில் மொத்தம் 1548 அறைகள் உள்ளன. அவை ஈஸ்ட் டவர் (கிழக்கு கோபுரம்) மற்றும் வெஸ்ட் டவர் (மேற்கு கோபுரம்) என்று இரண்டு தங்குமிட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு டவர்களும் ராயல் பிரிட்ஜ் சூட் (ROYAL BRIDGE SUITE) என்னும் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு பெரிய மற்றும் புகழ் வாய்ந்த நட்சத்திர ஹோட்டலில் ஈர்ப்புகளுக்கா பஞ்சம்! வாருங்கள்! பார்வையாளர்களை கவர அட்லாண்டிஸ் என்னவெல்லாம் தன் வசம் வைத்துள்ளது என்பதை காணலாம்.
அட்லாண்டிஸ் பாம்-ன் ஈர்ப்புகள்:
டால்பின் பே (DOLPHIN BAY):
அனைவருக்கும் அபிமான மற்றும் செல்லமான கடல் உயிரினமான டால்பின்களுடன் நீந்தவும், அவற்றின் ஆயுட்காலம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி மேலும் அறியவும் டால்பின் பே உதவுகிறது. மேலும் ஒவ்வொரு விருந்தினருக்கும் இந்த சேட்டை செய்யும் விளையாட்டு விலங்குடன் ஒருவருக்கொருவர் (one-on-one) நேரத்தை அனுபவிக்க 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி நீரில் மூழ்கி அழகிய இயற்கையான சூழலில் இந்த உயிரினங்களை பார்க்க மற்றும் அவற்றின் மேல் சவாரி செய்யவும் வாய்ப்புள்ளது. மிகவும் திறமையான பயிற்சியாளர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த சாகசங்கள் நடைபெறுகின்றன மற்றும் பல்வேறு வயதுக் குழுக்களுக்கு ஏற்ப பல பிரத்யேகமான செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இத்துடன் மருத்துவ ஆய்வகம் மற்றும் பதிவு அறைக்கு மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணம் இந்த குறும்புக்கார விலங்குகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதை அறிய உதவும்.
ஸீ லயன் பாயிண்ட் (SEA LION POINT):
ஸீ லயன் குளம், கடல் சிங்கம் என அழைக்கப்படும் இந்த அற்புதமான கடல் உயிரினங்களின் இயல்பை மனதில் வைத்து இடுப்பு அளவு ஆழமான நீர் கொண்ட குளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அழகான மற்றும் நேசமான பாலூட்டிகளுடன், 30 நிமிடங்கள் வரை செலவிட உங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதில் இந்த நகைச்சுவையான விலங்குகளின் குறும்புகளையும் மாறுபடும் ஆளுமைகளையும் அனுபவித்து அவைகளை அரவணையுங்கள்.
இந்த குறும்புக்கார சிங்கத்திடம் ஒரு ஈர முத்தம் பெற நேர்ந்தால் அன்றைய நாளின் அதிர்ஷ்டசாலி நீங்கள் தான். மேலும் இந்த பாசக்கார பாலூட்டிகளின் வாழ்க்கை முறை, வாழ்விடம், உணவுமுறை போன்றியவற்றை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், அருகில் இருக்கும் நிபுணர்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.
அக்வாவென்ச்சர் வாட்டர் பார்க் (AQUAVENTURE WATERPARK):
துபாயின் மிகப்பெரிய நீர் பூங்கா இந்த வாட்டர் பார்க்கில் பல சாதனை படைத்த சவாரிகள் உள்ளன. குறிப்பாக 27.5 மீட்டர் உயரமுள்ள லீப் ஆப் பைத் (Leap of Faith) என்னும் சவாரி உங்களை சுறாக்கள் மற்றும் வேறு பல மீன்கள் கொண்ட தெளிவான குழாய் வழியாக எடுத்துச் செல்லும்.

இதுமட்டுமின்றி இந்த வாட்டர்பர்க் முழுவதும் உங்களை கூட்டிச்செல்லும் சாகசமான ஜிப்-லைனிங் இந்த சாதனையில் ஒன்றாகும். சாகசங்களை விரும்பும் விருந்தினர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும்.
மேலும் இதுபோன்ற கடல் நடவடிக்கைகள் தவிர, பூங்காவில் தனியார் கடற்கரைகள் மற்றும் அனைத்து வயது குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்களும் உள்ளன. இதில் தனி சிறப்பு பெற்றது ‘ஸ்ப்ளாஷர்ஸ் சில்ட்ரன் ஜோன்’. இதில் இருக்கும் ஈர்ப்புகள் மற்றும் நடவடிக்கைகளில் நிச்சயமாக குழந்தைகள் மெய் மறந்து அனுபவிப்பார்கள்.

லாஸ்ட் சேம்பர் அக்குவாரியம் (LOST CHAMBER AQUARIUM):
இது துபாயில் உள்ள ஒரு தனித்துவமான பொழுதுபோக்கு மற்றும் தகவல் மையம் ஆகும். இங்கு வாழும் விலங்குகளின் பன்முகத்தன்மை காரணமாக அனைத்து வயதினருக்கும் சுற்றுலாப் பயணிகளையும் இது ஈர்க்கும்.

பயங்கரமான சுறாக்கள் மற்றும் பிரனாக்கள் முதல் அழகான கடல் குதிரைகள் மற்றும் அபிமான ஆமைகள் வரை 65,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் இந்த அக்குவாரியத்தில் வாழ்கின்றன.
ஷுகி ஸ்பா & சலூன் (SHUIQI SPA & SALON) :
இது ஒரு அமைதியான ஸ்பா ஆகும். அன்றாட வாழ்க்கையின் கவலைகளை மறந்து அமைதியை தேடுபவர்கள் நிச்சயமாக இந்த ஆடம்பர ஸ்பாவில் நிம்மதியான ஓய்வையும் அமைதியையும் பெறலாம்.

இந்த ஸ்பா நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீரோடைகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் 27 சிகிச்சை அறைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இங்கே செய்யப்படும் மசாஜ்கள் உங்களுக்கு ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியை தரக்கூடும்.
இது தவிர அட்லாண்டிஸ் பாம்-ல் அலை விளையாட்டுகள், நீச்சல் குளங்கள், கடற்கரை, ஷாப்பிங், ஹெலிகாப்டர் ரைடுகள், டைவிங், குழந்தைகள் பொழுதுபோக்கு போன்ற பல விஷயங்கள் உள்ளன.
பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாத மாதங்களான நவம்பர் முதல் ஏப்ரல் வரையும் தான் துபாயில் சுற்றிலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இருப்பினும் இது உச்சகட்ட சீசன் என்பதால் இம்மாதங்களில் அட்லாண்டிஸ் பாம் உட்பட அனைத்து ஹோட்டல் விலைகளும் ஏறுமுகத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம்
எல்லாம் சரி, எவ்வளவு கட்டணம் என நீங்கள் கேட்பது கேட்கிறது. மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். ஒரு அறை மட்டுமென்றால் (Imperial Club King Room) ஒரு நாளைக்கு 58,690 ரூபாய். இதுதான் குறைந்தபட்ச விலையே. அதிகபட்சமென்றால் இரண்டு பெட்ரூம் கொண்ட சூட் (2 Bedroom Regal Club Suite) -ல் தங்க வேண்டுமானால் நீங்கள் 1,73,179 ரூபாய் செலுத்தவேண்டும். இதற்கு இடைப்பட்ட விலையிலும் ரூம்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்.
இடம்:
அட்லாண்டிஸ், தி பாம், கிரஸண்ட் ரோடு, பாம், துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.
நேரம்:
ஹோட்டல் 24 மணி நேரமும் திறந்திருக்கும். வாட்டர்பார்க் தினமும் காலை 10 மணி முதல் சூரிய மறையும் வரை திறந்திருக்கும். ஆனால் வாட்டர்பார்க்குகள் மூடும் நேரங்கள் பருவத்திற்கு ஏற்ப மாறும்.
