பாலைவன பூமியான அமீரகத்தில் உங்களை குதூகலப்படுத்த உருவாக்கிய நீர் விளையாட்டு பூங்கா தான் வைல்ட் வாதி வாட்டர் பார்க். இது துபாயின் புகழ் பெற்ற ஜூமைரா பகுதியில் அமைந்துள்ள புர்ஜ் அல் அரபுக்கு அருகே இருக்கும் ஒரு சர்வதேச நீர் பூங்கா ஆகும். உலகின் 20 சிறந்த நீர் பூங்காக்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள இந்த பூங்கா உலகப் புகழ்பெற்ற ஹோட்டல் குழுவான ஜுமைரா இன்டர்நேஷனல் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அற்புதமான பூங்காவில் 30 க்கும் மேற்பட்ட வித்தியாசமான சவாரிகள் மற்றும் ஈர்ப்புகள், உங்கள் முழு குடும்பமும் அசராது அனுபவிக்கும் அளவு தகுதி வாய்ந்தது. வைல்ட் வாதி வாட்டர் பார்க்-ல் உள்ள புர்ஜ் சுர்ஜே (Burj Surj) என்னும் சவாரி தான் உலகிலேயே இரண்டு கிண்ணங்களைக் கொண்ட ஒரே ஸ்லைட் (slide with two bowls) என்னும் புகழ்பெற்றதாகும்.
இந்த பூங்காவில் 5 உணவகங்கள் உள்ளன. மேலும் நடமாடும் சிற்றுண்டி வண்டிகளும் பல வண்ண மிட்டாய்களுடனும், ஐஸ்கிரீம்களுடனும், பாப்கார்ன்களுடனும், பஞ்சு மிட்டாய்களுடனும் உங்களை கவர வலம் வந்து கொண்டே இருக்கும். இதுமட்டுமின்றி பூங்காவில் நினைவு பரிசு மற்றும் நீச்சல் டயப்பர்கள், குழந்தைகளுக்கான ஆன்டி-ஸ்லிப் சாக்ஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் இரண்டு பரிசு கடைகளும் உள்ளன.
வைல்ட் வாதி வாட்டர் பார்க்கின் ரைடுகள்:
மாஸ்டர் பிளாஸ்டர்:
இது ஒரு எதிர்திசை வாட்டர் ஸ்லைடு ஆகும். இதில் பாயும் நீர், அதிக சக்தி வாய்ந்த ஜெட் மூலம் மேல்நோக்கி செலுத்தப்படுகிறது.
வைப்அவுட் மற்றும் ரிப்டைட் ஃப்ளோ ரைடர்ஸ் (Wipeout and Riptide Flow riders):
பார்வையாளர்கள் முழங்கால் போர்டிங் அல்லது பாடிபோர்டிங் செய்வதற்கு ஏற்பவாறு ரோலிங் அலை விளைவை உருவாக்க ஒவ்வொரு நொடியும் ஏழு டன் தண்ணீர் இங்கே வெளியேற்றப்படுகிறது.
ஜுஹாவின் பயணம் (Juha’s Journey):

இந்த வாட்டர் பார்க் முழுவதும் பாம்பு போல சுற்றி பிணைந்து இருக்கும் இந்த ஈர்ப்பில் ஒற்றை அல்லது இரட்டை இருக்கை குழாய்களில் அமர்ந்து பார்வையாளர்கள் பயணம் செய்யலாம். இந்த 360 மீட்டர் நீளமுள்ள ஆறு போல ஓடும் சறுக்கையில் அமைதியாக சறுக்கிக்கொண்டே ஓய்வெடுக்கலாம்.
பிரேக்கர்ஸ் பே (Breaker’s Bay):
இது ஒரு மாபெரும் அலைக்குளம். ஆம்.! செயற்கையாக உருவாக்கிய கடல் அலைய போன்ற இது தான் உலகின் மிகப்பெரியதாகும். நீங்கள் உட்கார்ந்து கண்கவர் காட்சிகளை அனுபவிக்கும்போது அலையில் மேலேயும் கீழேயும் குதித்து மகிழுங்கள்.
டான்ட்ரம் அல்லே (Tantrum Alley):

இது ஒரு இதய துடிப்பை அதிகரிக்கும் ஸ்லைடு ஆகும். அதாவது உங்களை மூன்று செயற்கை சூறாவளிகளைக் கடந்து, இறுதியில் ஸ்பிளாஷ் குளத்தில் கொண்டு செல்லும். நிச்சயமாக இது ஒரு சவாலான அனுபவம் தான்.
புர்ஜ் சுர்ஜ் (Burj Surj):
பல திருப்பங்களுடன் ஸ்லைடுகள் சுழன்று பின்னர் ஸ்பிளாஷ் குளத்தில் பயணத்தை முடிவடைய செய்யும் வாட்டர் ரைட் தான் இது.
ஜுமைரா சீரா (Jumeirah Sceirah):

120 மீட்டர் நீளமுள்ள இந்த ரைடை அனைவராலும் செய்யமுடியாது. பலத்த மனம் கொண்டவர்களுக்கு இது ஒரு விருந்து. ஏனென்றால் ஒரு மணி நேரத்திற்கு 80 கிமீ வேகத்தில் செல்லும் மின்னல் சவாரி இதுவாகும்.
டவ் மற்றும் லகூன் (Dhow and Lagoon):

இளம் பார்வையாளர்களைக் கவர 100 க்கும் மேற்பட்ட நீர் வேடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டு குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயல்பாட்டுப் பகுதி ஆகும். 1.1 மீட்டர் உயரத்திற்கு கீழே உள்ள பார்வையாளர்களை மட்டுமே இதில் அனுமதிக்கபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைல்ட் வாதி உணவகங்கள்:
ரைடுகளை முடித்து வந்ததும் வரும் பேய் பசியை போக்க இந்த பூங்காவில் உள்ள 5 உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி பார்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் பசியை தீர்த்துக்கொள்ளவும். உற்சாகத்திற்குப் பிறகு புத்துணர்ச்சியூட்டும் உணவை அனுபவிக்க இது நல்ல வாய்ப்பு. பலவகையான பீட்சாக்கள், பர்கர்கள், பொரியல்கள், ஷவர்மாக்கள், வறுத்த கோழி, பழச்சாறு, சுவையான பால் மற்றும் பலவற்றிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
கபானாக்கள் (Cabanas):

பழங்கள் மற்றும் குளிர்பானங்களால் நிரப்பப்பட்ட உங்கள் சொந்த தனி குளிர்சாதனப்பெட்டியுடன் வசதியான லவுஞ்ச் நாற்காலியில் அமர்ந்து ஜூமைரா ஹோட்டல்களின் ஆடம்பரமான காட்சியை அனுபவிக்க இது தான் ஒரு சிறந்த இடம்.
ஷாப்பிங்:
இதுமட்டுமின்றி வைல்ட் வாதி வாட்டர் பார்க்-ல் 4 சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பரிசு கடைகள் உள்ளன. அங்கே நீச்சலுடை, டி-ஷர்ட், தண்ணீர் பொம்மைகள், நீச்சல் டயப்பர்கள், ஆன்டி-ஸ்லிப் சாக்ஸ், துண்டுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் போன்றியவை வாங்கலாம்.
சிறந்த நேரம்:
அக்டோபர் முதல் மார்ச் வரை வைல்ட் வாதி வாட்டர் பார்க்கிற்கு வருவதற்கு சிறந்த காலமாக பார்வையாளர்களால் கருதப்படுகிறது.
வைல்ட் வாதி வாட்டர் பார்க் பார்வை நேரம்:
வைல்ட் வாதி வாட்டர் பார்க் ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
குறிப்பு:
நாளின் பிற்பகுதியில் மிக நீண்ட வரிசைகளைத் தவிர்ப்பதற்காக திறக்கும் நேரத்திற்கு முன் பூங்காவிற்கு வருகை தருவது சிறந்தது. இது கூட்டநெரிசலை தவிர்க்க உதவியாக இருக்கும்.
மேலும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமை இரவு 8:00 மணி முதல் நள்ளிரவு வரை பிரத்யேகமாக பெண்களுக்கென பெண்கள் இரவாக செயல்படுகிறது.

வைல்ட் வாதி வாட்டர் பார்க் டிக்கெட் விலை:
பிரதான வாயில் (Main Gate):
1.1 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு: AED 269
1.1 மீட்டருக்கு கீழே உள்ளவர்களுக்கான டிக்கெட் விலை: AED 239
ஆன்லைன் புக்கிங் (Online Booking):
1.1 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு: AED 259
1.1 மீட்டருக்கு கீழே உள்ளவர்களுக்கான டிக்கெட் விலை: AED 199
பார்வையாளர்களுக்கு சில பயனுள்ள டிப்ஸ்:
- பூங்காவிற்குச் செல்லும்போது பொருத்தமான நீச்சலுடைகளை அணியுங்கள். இது ஒரு குடும்ப பூங்கா என்பதை மனதில் வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
- குறிப்பாக நீங்கள் குழந்தைகளுடன் செல்கிறீர்கள் என்றால் கூடுதல் ஜோடி நீச்சலுடைகளை எடுத்துச் செல்லுங்கள்.
- பூங்காவில் உள்ள வசதிகளை முழுமையாக அனுபவிக்க குறைந்தது நான்கு மணிநேரம் தேவைப்படும் என்பதை அறிந்து உங்கள் பயணத்தை முடிவு செய்யுங்கள்.
- பூங்காவில் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் இருக்க உங்கள் சொந்த டவல்களை எடுத்துச் செல்லுங்கள்.
- ஒவ்வொரு குளத்திலும் நீங்கள் இறங்குவதற்கோ அல்லது மூழ்குவதற்கு முன்னரோ அதன் ஆழத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உயிர்காப்பாளரின் அறிவுறுத்தல்களை எப்போதும் பின்பற்றவும். உங்களுக்கு சரியான இருக்கைகளை அவர்களே தந்து உதவுவார்கள்.
- எப்போதும் உட்கார்ந்த நிலையில் சவாரி செய்யுங்கள். மேலும் அனைத்து சவாரிகளிலும் உங்கள் குழாயின் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளுங்கள்
- 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எப்போதும் வயது வந்த நபர் ஒருவருடன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்.
