உலகின் மிக உயரமான வானளாவிய கட்டிடம், மிகப்பெரிய ஷாப்பிங் மால், உலகின் மிக நீளமான “டிரைவர் இல்லா” மெட்ரோ அமைப்பு மற்றும் இன்னும் பல வியப்பூட்டும் அற்புதங்களைக் கொண்ட அமீரகத்தின் அசாதாரணமான கட்டிடக்கலையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது ‘உலகின் மிகப்பெரிய ஃபிரேம்’ என்று கின்னஸ் சாதனை படைத்த ‘துபாய் ஃபிரேம்’.
‘துபாயின் கோல்டன் லேண்ட்மார்க்’ என்று தற்போது அனைவராலும் அழைக்கப்படும் துபாய் பிரேமில் என்னென்ன சுவாரஸ்யங்கள் உள்ளன என்பதைப் பற்றி காணலாம்.
கட்டமைப்பு:
150m உயரத்தில் கட்டப்பட்ட இந்த ஃபிரேமானது இரண்டு ராட்சத தூண்களை கொண்டுள்ளது. அந்த தூண்கள் 100 sq.m நீளம் கொண்ட பாலத்தினால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நடுவே 125sq.m அளவில் கண்ணாடி பேனல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுவே கண்ணாடி பாலத்தில் நடக்கும் நடைபாதையைக் கொண்ட அமீரகத்தின் முதல் கட்டிடமாகும். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு துபாய் நகரத்தின் மொத்த அழகையும் தங்க போட்டோ ஃபிரேமில் பார்ப்பது போன்ற கண்கவரும் கட்டமைப்பை இது கொண்டுள்ளது. அந்த ஃபிரேமின் மேற்பரப்பில் தெரியும் தங்கம் போன்ற ஒளிர்வை அமைப்பதற்காக துருப்பிடிக்காத தன்மையை கொண்ட பேனலில் டைட்டானியம் நைட்ரேட் பூசப்பட்டுள்ளது.
எதற்காக இந்த ஃபிரேம்?
நாம் யோசிக்கலாம்.! துபாய் நகரை பார்ப்பதற்கு பெரும் பணச்செலவில் எதற்கு இவ்வளவு பெரிய ஃபிரேம்? என்று. ஆனால் ஃபிரேமின் உள்ளே சென்று பார்க்காத வரை அதன் அழகு புரியாது.
ஃபிரேமின் நுழைவு வாயிலில் ஒரு அழகிய நீரூற்றுடன் பயணம் ஆரம்பமாகிறது. உள்ளே, ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த துபாய் தற்போது உலகின் வளர்ந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றதற்கான காரணத்தைக் காணும் வகையில் நிறைய புகைப்படங்கள் மற்றும் பொருள்கள் கொண்ட அருங்காட்சியம் ஒன்று அமைந்துள்ளது. துபாய் நகரத்தின் வளர்ச்சியை சான்றுகளுடன் கண்குளிர இங்கே காணலாம்.
பொக்கிஷ பழமை:
அருங்காட்சியத்தைத் தொடர்ந்து ஒரு லிஃப்ட்டின் மூலம் ஃபிரேமின் மேற்பகுதிக்கு பார்வையாளர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். உள்ளே நுழைந்ததும் “இது பழைய துபாய் !இது புதிய துபாய் !” என்று பார்வையாளர்கள் வியக்கும் வகையில் துபாய் நகரமே கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை அத்தருணத்தில் தான் உணர முடிகிறது. ஆம்! ஃபிரேமின் இடது புறத்தில் பழைய துபாயை குறிக்கும் வகையில் இடங்கள் அமைந்துள்ளன (உம் ஹுரைர், அல் கராமா, தேரா, பர் துபாய்). இதன் அம்சம் இங்கே இருக்கும் எந்த ஒரு கட்டிடங்களும் நான்கு மாடிகளுக்கு மேல் கட்டப்படவில்லை. மேலும் துபாயின் இதயமாக இந்த பழமை வாய்ந்த இடம் கருதப்படுகின்றது.
நவீன துபாய்.!
இப்போது இருக்கும் நவீனத்தை விரும்பும் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் வாழும் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரை கேட்டாலும் பதில் சொல்லும் பெருமை வாய்ந்த “உலகின் மிக உயரமான கட்டிடம்” என புகழாரம் சூடிய “புர்ஜ் கலிஃபா” மற்றும் அதனருகே “உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் மால்” என்று அழைக்கப்படும் துபாய் மால் போன்றியவை ஃபிரேமின் வலது புறம் அமைந்துள்ளது. இந்த காட்சியை காணும்போது 30 வருடம் முன்னேறி சென்று எதிர்காலத்தை பார்ப்பது போன்று மனதிற்குள் சிலிர்ப்பு ஏற்படுகின்றது. என்ன ஒரு முன்னேற்றம்! என்ன ஒரு படைப்புத்திறன்!
தைரியத்திற்கான சவால்:
சரி! ஃபிரேமை பார்த்து விட்டோம். ஆனால் இங்கே பொழுதுபோக்கு என்ன இருக்கின்றது? என்ற கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது இந்த கண்ணாடி நடைபாதை. சவாலை விரும்பும் ஆட்களுக்கு இந்த நடைபாதை ஒரு விருந்தாக இருக்கும். ஆனால் மனது பலவீனமானவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஏனென்றால் இந்த கண்ணாடி நடைபாதைக்கு கீழ் தெரியும் உயரமானது பிரம்மிப்பூட்டும் திகிலான அனுபவத்தை தரவல்லது. இந்த கண்ணாடி பாதையைக் கடக்கும் போது ஜபீல் பூங்காவின் அழகையும் ரசிக்க ஏற்றவாறு பாலம் அமைந்துள்ளது.
இத்துடன் பார்வையாளர்களுக்கு மற்றுமொரு பொழுதுபோக்கிற்காக “டச் ஸ்க்ரீன் பேனல்கள்” பொருத்தப்பட்டுள்ளது. இதில் எழுதப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஃபிரேமின் உள்ளே பொருத்தப்பட்ட பெரிய ஸ்க்ரீனில் தெரியும். இது அங்கே வரும் பார்வையாளர்களை மற்றுமொரு விதத்தில் கவர்கிறது.


துபாயின் எதிர்காலம்:
ஃபிரேமினுள் அனுமதிக்கப்பட்ட நடைக்கு பின் பயணத்தின் இறுதி கட்டம் துபாயின் எதிர்கால அருங்காட்சியகத்தோடு முடிவடைகிறது. இதில் 50 ஆண்டுகளுக்கு பின் துபாய் எப்படி இருக்கும், அதன் தொழில்நுட்ப வளர்ச்சிகள் போன்றிய காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும். இதை கடந்து செல்லும் பார்வையாளர்கள் அனைவரும் வியக்கத் தவறாதவாறு ஒவ்வொன்றும் நுணுக்கமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் கவனத்திற்கு:
- பாதுகாப்பு கருதி துபாய் ஃபிரேமில் 20 நிமிட பயணம் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது
- கண்ணாடி பாலத்தில் ஓடுவதோ குதிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
- எந்த வித தள்ளுவண்டிகளும் (Baby prams, Strollers and Wheel Chairs) உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதற்கான ஏற்பாடுகள் நிர்வாகத்தின் மூலமே செய்து தரப்படும்.
- ஃபிரேமின் உள்ளே எந்த தின்பண்டங்களும் எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஃபிரேமினுள் இருக்கும் சிறிய கஃபேவை பார்வையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
துபாய் ஃபிரேம் (வார இறுதி மற்றும் பொது விடுமுறைகள் உட்பட) ஆண்டு முழுவதும் பார்வையார்களுக்காக திறந்திருக்கும்.
பார்வை நேரம்: காலை 9.00 முதல் இரவு 9.00 வரை.
புனித ரமலான் மாதம், விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வருகை நேரம் மாறுபடலாம்.
டிக்கெட் விலை:
- 3 வயதுக்கு கீழ்: இலவசம்
- 3 வயது முதல் 12 வயது வரை: AED 20
- 12 வயதுக்கு மேல்: AED 50
அமைவிடம் (Map)
