புஜைராவின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது அல் பிதியா கிராமம். இங்குதான் இருக்கிறது 600 ஆண்டுகால பழமையான மசூதி. அமீரகத்தின் முதல் மசூதி இது இல்லை என்றாலும், தற்போதைய அளவில் பயன்பாட்டில் இருக்கும் மிகப் பழமையான மசூதி என்றால் இந்த அல் பிதியா மசூதிதான்.
அல் பிதியா கிராமத்தில் அமைந்துள்ளதால் இந்த மசூதியை கிராமத்தின் பெயர்கொண்டே அழைக்கிறார்கள். எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் கற்கள், களிமண் என கையில் கிடைத்ததைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறிய மற்றும் அழகான மசூதி காண்போரை நிச்சயம் பரவசப்படுத்தாமல் இருப்பதில்லை.
யார் கட்டியது?
இந்தக் கேள்வியைத்தான் அமீரகத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரஷாத் புக்காஷ் -இடம் கேட்டிருக்கிறார்கள் அனைவரும். ஆனால் அந்த கேள்வி தற்போதுவரை கேள்வியாகவே எஞ்சுகிறது. இதுகுறித்துப் பேசிய புக்காஷ்,” பல ஆண்டுகள் கழித்து கடந்த 2008 ஆம் ஆண்டுதான் நாங்கள் இந்த மசூதியை புதுப்பிக்கத் துவங்கினோம். இவ்வளவு காலம் ஆனாலும் இன்னும் இந்தக் கட்டிடம் உறுதியாகவே இருப்பது நிச்சயமாக அதிசயம் தான்” என்றார்.

வித்தியாசம்
பொதுவாக மசூதிகள் ஒற்றை குவி மாடத்தினைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மசூதியில் நான்கு சிறிய குவி மாடங்கள் அமைந்துள்ளன. அதுவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில், அளவில் கட்டப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.
எப்போது கட்டப்பட்டது?
புஜைரா தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை சிட்னி பல்கலைகழகத்துடன் இணைந்து நடத்திய பல்வேறுகட்ட ஆய்வுகளின் முடிவில் மசூதி கிபி. 1446 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
அப்படியெல்லாம் இல்லப்பா.. 1599 ஆம் ஆண்டு தான் மசூதி கட்டப்பட்டது என ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டுதான். புஜைராவின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஹமாத் பின் முகமது அல் ஷார்கி அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் பெயரில் மசூதி குறித்த ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டதில் மசூதியின் உண்மை வயது வெளியுலகத்திற்கு தெரியவந்தது. வயது முன்னப்பின்ன இருந்தாலும் 500 – 600 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் அங்கு கட்டிடம் கட்டும் திறமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் பொய்யில்லை.
அமைவிடம்
ஓமான் வளைகுடாவில் கடலுக்கு அருகில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் இந்த அல் பிதியா. வேளாண்மை மற்றும் மீன்பிடித்தலே இங்குள்ள மக்களின் பிரதான வேலைகள் ஆகும். எமிரேட்டுகள் ஒன்றிணைந்து அமீரகம் உருவாகையில் அதாவது 1971 ஆம் ஆண்டு, கிராமத்தை அமீரகத்துடன் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையானது போடப்பட்டது.

பிரபல வரலாற்றுப் பயணியான இப்னு பதூதா 1140 ஆண்டுவாக்கில் கிழக்குக் கடற்கரைப் பிராந்தியத்திற்கு வந்ததற்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன.
உள்ளே…
புஜைரா நகராட்சி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 6.8 * 6.8 மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சிறிய மசூதியினுள் மின்பார் மற்றும் மெஹ்ராப் மெக்காவைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளன.
மின்பார் என்பது இமாம் தொழுகை நடத்தும் இடமாகும். மெஹ்ராப் என்பது இமாம் பிரசங்கம் நடத்தும் இடமாகும். சுவர்களில் செதுக்கல் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே வருவதற்காக துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குரான் பிரதிகளும் இங்கே இருக்கிறது. தளத்தைப் பாதுகாக்க அரக்கு நிற விரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒட்டமான் பேரரசு எழுச்சி பெற்றிருந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதியை முஸ்லீம்கள் அல்லாதோரும் கண்டு, பழங்கால கட்டிடக்கலை குறித்து வியந்து வருகின்றனர்.
அங்கீகாரம்
2008 ஆம் ஆண்டு துபாய் மாநகராட்சியிடம் இந்த மசூதியை புனரமைக்க ஒப்புதல் கோரப்பட்டது. அனுமதி கிடைத்த ஆறுமாதத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்து முடிந்தன. இமாம்கள் ஒலு செய்வதற்கான இடங்கள் மற்றும் தங்கும் இடங்கள் கட்டப்பட்டன. சுற்றுலாவாசிகள் வசதிக்கேற்ப சில கட்டுமானப் பணிகளையும் நகராட்சி மேற்கொண்டது. இதில் சிறப்பம்சம் என்னெவென்றால், பழங்காலத்தில் எந்தெந்த பொருட்களைக்கொண்டு (மண், கற்கள் போன்றவை) அந்த மசூதி கட்டப்பட்டதோ, அவற்றையே கொண்டு புனரமைப்புப் பணிகளும் நடைபெற்றிருக்கின்றன.

பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அமைப்பினால் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புஜைராவில் அமைந்திருக்கும் இந்த அழகிய மசூதியை நேரம் கிடைப்பவர்கள் தவறாமல் சென்று பார்த்துவாருங்கள்.